க்ரைம்

தக்காளியுடன் மாயமான லாரி கண்டுபிடிப்பு!

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி மாயமானதை அடுத்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் அந்த லாரி பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தக்காளியுடன் லாரியை மீட்டு வர போலீசார் பஞ்சாப் மாநிலம் விரைந்துள்ளனர்.

தற்பொழுது தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டு தங்கத்திற்கு இணையாக பேசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தக்காளி விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருப்பதுடன் மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்து வருகின்றனர். இப்படி தக்காளியை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வரும் கர்நாடக மாநில விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி, கர்நாடக மாநில கோலார் காய்கறி சந்தையில் இருந்து தக்காளி வியாபாரிகளான எஸ்விடி டிரேடர்ஸ் உரிமையாளர் முனி ரெட்டி மற்றும், ஏஜி டிரேடர்ஸ் உரிமையாளர் சக்லின் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு வழக்கம் போல, மெஹாட் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரியில் சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி லோடு ஏற்றி அனுப்பி உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் இருந்து தக்காளி கொள்முதல் செய்பவரிடம் இருந்து தங்களுக்கு தக்காளி லோடு இதுவரை வந்து சேரவில்லை என வியாபாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் லாரி நிறுவன உரிமையாளரான சாதிக் என்பவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் முனிரெட்டியும், சக்லினும் கோலார் போலீசில் இது பற்றி புகார் அளித்தனர். 

தற்பொழுது தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் தக்காளி லோடு லாரிகளை வீடியோ எடுத்துள்ளனர்.  புகாரின் பேரில் சுங்கச்சாவடிகளில் பதிவாகியுள்ள வீடியோ பதிவுகளை கொண்டு லாரியை தேடிய பொழுது நேற்று 31 ஆம் தேதி அந்த லாரி பஞ்சாப் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, லாரியை மீட்டு வருவதற்காக கோலார் போலீசார் பஞ்சாப் விரைந்துள்ளனர்.

21 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளி ரோடு லாரி திடீரென மாயமானதால் வியாபாரிகள் அதிர்ச்சியான சம்பவம் கோலார் மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.