கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி முதல்வர் தென்னரசு (பொறு) இவர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் பசுமைவளவன் என்பவர் தொலைபேசியில் தன்னை தொடர்புகொண்டு அவதூறாக பேசி பணிசெய்ய விடாமல் மன உலைச்சல் ஏற்படுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக ஆடியோ பதிவுடன் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தார்.
அதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் தற்போது மேற்கண்ட கல்லூரியில் 2021-22 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இதில் சிதம்பரம் பாராளுமன்ற விசிக தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் என்பவர் மாணவர் ஒருவருக்கு சேர்க்கைக்காக சிபாரிசு கடிதம் வழங்கியதாக தெரிகிறது.
கடிதத்தை கல்லூரி முதல்வர் தென்னரசு நிராகரித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணியின் செயலாளர் பசுமைவளவன் கல்லூரி முதல்வரை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பசுமைவளவன் கல்லூரி முதல்வர் தென்னரசை அவதூறாக திட்டி கொலைமிரட்டல் விடுத்தது உறுதியானது. சம்பந்தபட்ட ஆடியோ பதிவின் அடிப்படையில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் மீனா, உதவி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 294பி, 353 மற்றும் 506-I பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
மேலும் கல்லூரி முதல்வரை விசிக பிரமுகர் மிரட்டும் ஆடியோ சமூக வளைதலங்களில் பரவி வருவதால் காட்டுமன்னார்கோவில் பரபரப்பு.