க்ரைம்

போலி அடையாள அட்டையில் 620 சிம்; ஆக்டிவ் செய்த டீலர் கைது! 

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடியில் சுமார் 620 போலி சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்த தனியார் சிம்கார்டு டீலர்ஷிப் கடை உரிமையாளர் சைபர் குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அளித்த அறிக்கையில் கடந்த 2021ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5000 சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதாக விபரங்கள் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி, பிரையண்ட் நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ராயன் என்பவர் வெங்கடேஸ்வரா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் சிம்கார்டு டீலர்ஷிப் கடை மூலம் சுமார் 620 போலியான சிம்கார்டுகளை ஆக்டிவேசன் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கடைக்கு ஜெராக்ஸ் எடுக்கவரும் நபர்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்தி பல போலியான சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்துள்ளதும் தெரியவந்தது. உடனே ராயனை கைது செய்த தனிப்படை போலீசார்  அவரிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
 
மேலும் விசாரணை மேற்கொண்டதில், இதேபோன்று பல நபர்கள் செல்போன் டீலர்ஷிப் என்ற பெயரில் பொதுமக்களின் ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்துள்ளதாகவும், பல சட்டவிரோத செயல்களுக்கு அந்த சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.