க்ரைம்

மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு...யார் இந்த மகேஸ்வரி?

Tamil Selvi Selvakumar

கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் காஞ்சிபுரம் வீடு மற்றும் அவர் தொடர்புடையை இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி, துப்புரவு பணிக்காக நகராட்சி சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட கிருமி நாசினியில் கூடுதலாக கணக்கு காண்பித்து அரசிற்கு 32 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அத்துடன், இவ்விவகாரத்தில் துப்புரவு  ஆய்வாளராக இருந்த இக்பால், ரமேஷ் குமார், ராதாகிருஷ்ணன், உதவி அலுவலர் சந்தவள்ளி ஆகியோரும் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரத்தில் உதவி அலுவளராக இருக்கும் சந்தவில்லியின் திருக்காலிமேடு வீட்டிலும், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர். 

அதேபோல் மகேஷ்வரி கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் ஆணையராக பொறுப்பேற்ற நிலையில், ஆர்.எம்.காலணி பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய இக்பால், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெவ்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்தப் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.