க்ரைம்

பள்ளி மாணவர்களுக்குள் வன்முறை... கண்டுகொள்ளாத ஆசிரியர்கள்!

Malaimurasu Seithigal TV

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சக மாணவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மேல்நிலைப் பள்ளியில் திறனாய்வு தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த திறனாய்வு தகுதி தேர்வில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தண்டலம் மேல்நிலைப்பள்ளி என அரசு பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கு பெற்று தேர்வு எழுதினர்.

காலையில் கணக்கு தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில் மதியம் உணவு இடைவேளையில் ஸ்ரீபெரும்புதூர் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களை அடித்து பாக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த  பள்ளியின் பேட்ஜை கிழித்து வீசி உள்ளனர். இதனால் தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலை தெறிக்க ஓடி ஆங்காங்கே பதுங்கி உள்ளனர்.

இதனால் தண்டலம் அரசு பள்ளி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வில் மதியம் நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு எழுத முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் காயமுற்ற மாணவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவனிடம் புகார் பெற்றுக் கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த ஆனந்த் என்கின்ற மாணவன், இது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டும், அவன் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பாஜக மாநில பட்டியலின பொருளாளர் பி பி ஜி டி சங்கர் படுகொலை வழக்கில் ஆனந்த் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார்  கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவர்கள் தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை  தாக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.