க்ரைம்

நகை பட்டறையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்... அதிரடி நடவடிக்கை!!

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்களை நகை பட்டறையில் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தொழிற்சாலை, மற்றும் தனியார் கம்பெனிகளில் சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள், சட்ட விரோதமாக பணியில் அமர்த்தப்படும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவரவர் உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த  சோதனையானது வாரம் தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தியுள்ளதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு கூடுதல் செயலாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை மாவட்ட குழந்தைகள் நல தடுப்பு பிரிவு  உதவி ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ரெட்டி ராமன்  தெருவில் உள்ள நகை பட்டறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் குடோனில் பணியாற்றி வந்த 7 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 12 மேற்கு வங்கத்தை சேர்ந்த குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை 7000 முதல் 10 ஆயிரம் வரை அவருடைய பெற்றோர்களுக்கு வழங்கப்படுவதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் குழந்தைகள் தங்கும் இடம் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது எனவும், கழிவறைகள் பொதுக் கழிவறைகளை விட மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குழந்தை நல தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்திய கம்பெனி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.