ஆவடியில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பிரமுகர் ஒருவர் இரண்டாவது மனைவிக்கு தெரியாமல் 3 ஆவது திருமணம் செய்ததோடு 2ஆவது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி காந்தி நகர், சத்தியவாணி முத்து தெருவைச் சேர்ந்தவர் தேவிகா. இவர் முதல் கணவருடன் விவாகரத்தான நிலையில், ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது ஆவடி, கோவர்த்தனகிரியை சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி (51) என்பவர் தேவிகாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.
பின்னர், அவர், முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டேன் என பொய்யான தகவல் கூறி, தேவிகாவை 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், 2 ஆவது திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனிடையே, மூர்த்தியின் முதல் மனைவி நளினிக்கு, நடந்த அணைத்து சம்பவங்களும் தெரிய வந்த நிலையில், ஆரம்பத்தில் பிரச்சனை செய்துள்ளார். அதன் பின்னர் தேவிகாவையும் குழந்தையும் ஏற்றுக்கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதை அறிந்த நளினி பிரச்சனைகளை செய்து அந்த தொடர்பை முறித்துவிட்டுள்ளார். பின்னர் சில நாட்களில், எதோ ஒரு பிரச்சனை காரணமாக நளினி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது மூர்த்தி, ஜென்சி என்ற பெண்ணை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜென்சி, ஆவது மனைவி தேவிகாவிடம், மூர்த்தியை 3 வதாக திருமணம் செய்து கொண்டேன் என்றும், அவரை விட்டு பிரிந்து சென்று விடு, இல்லை என்றால் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவேன் என மூர்த்தியுடன் சேர்ந்து அடித்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேவிகா, இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எஸ்.கே.எஸ்.மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, "எனக்கும் எனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மூர்த்தி ஜெயிலில் இருந்து வெளியில் வந்தால், பி.ஜே.பி கட்சி பலத்தைக் கொண்டு என்னை கொலை செய்வதாக சொல்லி இருக்கிறார். எங்களுக்கு எதுவும் நேரிடாமல் பார்த்து கொள்ளுங்கள்," என தேவிகா கோரிக்கையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.