க்ரைம்

ஆருத்ரா மோசடி; ஏஜென்டை கடத்திய பாதிக்கப்பட்டோர்... கைது செய்த போலீஸ்!

Malaimurasu Seithigal TV

ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக இருந்த நபரை பாதிக்கப்பட்டவர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கலா. இவருடைய மகன் செந்தில் குமார் வயது 37. இவர் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக பணியாற்றியுள்ளார் அதில் பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்று ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். 

இதற்கடுத்தபடியாக ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு பொருளாதார குற்ற பிரிவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில்குமார் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் இருந்த பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் செந்தில்குமாரை நம்பி பணத்தை முதலீடு செய்த நபர்கள் செந்தில்குமாரை கடத்தியுள்ளனர். 

மேலும் அவருடைய மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு செந்தில்குமார் மூலமாக 15 லட்சம் ரூபாய் தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என செந்தில் குமார் மனைவியிடம் தகவல் கொடுத்துள்ளனர். 

மேலும் இந்த விவகாரத்தில் செந்தில்குமார் தாயார் கலா என்பவர் நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கோயம்பேடு போலீசார் ஐந்து நபர்களை கைது  செய்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.