க்ரைம்

சிவகங்கை சம்பவம்; திமுக கவுன்சிலர் மகன் கைது! மருது சேனை தலைவருக்கு வலைவீச்சு!!

Malaimurasu Seithigal TV

காரைக்குடியில் மதுரை இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் மகன் உள்ளிட்ட  9 பேர் கைது. மருது சேனை நிறுவனத் தலைவர் தலைமறைவு வலைவீசி தேடும் தனிப்படை.

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர்  வினீத் (27). இவர் காரைக்குடியில் 2 மாதத்திற்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமீன் பெற்று காரைக்குடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், ஜூன் 18-ம் தேதி காலையில் காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது, ஒரு கும்பல் அவரை வெட்டிப் படுகொலை செய்தது. இதுகுறித்து வினீத்தின் தந்தை ஞானசேகர் அளித்த புகாரின் பேரில் மையிட்டான்பட்டியைச் சேர்ந்த மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் உட்பட 10 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்தனர்.

தொடர்ந்து காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின், குற்றப்பிரிவு எஸ்ஐ உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இவ்வழக்கில் தொடர்புடைய ஆதிநாராயணன் மைத்துனரும் மதுரை மாநகராட்சி 85வது வார்டு திமுக  கவுன்சிலர் விஜயா குருசேர்வை மகனுமாகிய தனுஷ் என்ற தனசேகரன் (31) மற்றும் செல்வக்குமார் (23), நவீன்குமார் (24), அஜீத்குமார் (27), ஆவரங்காட்டைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (31), மதுரை கே.புதூரைச் சேர்ந்த சேதுபதி (25), திருமங்கலம் கங்குராம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (24), ஸ்ரீதர் (19), ஊமச்சிக்குளத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (26) ஆகிய 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து  2 சொகுசு கார்கள், 2 இருசக்கர வாகனம், வாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட விஜீத் குடும்பத்துக்கும், ஆதிநாராயணன் தரப்புக்கும் இடையே மையிட்டான்பட்டி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விருதுநகர் நகராட்சி சந்தை ஏலத்தை எடுக்க வினீத் தரப்பினர் முயன்றனர். இதையடுத்து அவர்களை ஏலம் எடுக்கக் கூடாது என ஆதிநாராயணன், தனசேகரன் மிரட்டி வந்தனர். இந்நிலையில்  காரைக்குடியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, மருது சேனை நிறுவன தலைவர் ஆதிநாராயணனை கொலை செய்ய வினித் குழுவினர் சிறையில் திட்டம் தீட்டியதாகவும், இந்த திட்டம் குறித்து தெரிந்து கொண்ட ஆதிநாரணயணன் தூணடுதல் பேரில் வினீத்தை படுகொலை செய்ய திரைப்படத்தில் வரும் காட்சி போல பல்வேறு திட்டங்கள் தீட்டி, காரைக்குடியில் வைத்து கொலை செய்தது விசாரனையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வினித் படுகொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஒடி தலைமறைவான ஆதி நாரயணணை போலீசார் தேடி வருகின்றனர். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை சிவகங்கை மாவட்ட எஸ்பி செல்வராஜ் பாராட்டினார்.