சென்னையை அடுத்த கந்தன்சாவடி அருகே, சாலை அமைக்க பணம் கேட்டு குடியிருப்பு வாசிகளிடம் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கந்தன்சாவடி கே.பி.கே நகர் பகுதியில் சாலை அமைப்பதற்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தனின் மகனும், கவுன்சிலருமான கே.பி.கே சதீஷ் அப்பகுதி வாசிகளிடம் வீட்டிற்கு 5 ஆயிரம் தரக்கோரி கட்டாய வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் கணவனை இழந்து கூலி வேலை செய்து வரும் செல்வி என்பவர் தன்னிடம் பணம் கொடுப்பதற்கு வசதி இல்லை என்றுக்கூறி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர் சதீஷின் ஆதரவாளர்கள் அப்பெண்ணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அநாகரிக வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் வீட்டின் கீழ் இருந்த பழுப்பை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அப்பெண்மணி தனது செல்போனில் வீடியோ எடுத்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனிடையே சம்பவம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட பெண்மணி செல்வி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராமல், விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு, அதன் பின்னர் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை என செல்வி குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி சாலை போடுவதாக கூறி வீட்டுக்கு 5000 ரூபாய் என பல லட்சம் ரூபார் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிமுகவினர், பணம் தராதவர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டும், கொலை மிரட்டலும் விடுத்து வரும் நிலையில், காவல்துறையினர் இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.