க்ரைம்

அதிமுக பிரமுகரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்... காரணம் என்ன?

சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடலூரைத் தொடர்ந்து சேலத்திலும் அதிமுக பிரமுகர் கொலையுண்டதற்கான காரணம் என்ன?

மாலை முரசு செய்தி குழு

சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவைச் சேர்ந்தவர் 60 வயதான சண்முகம். சேலம் கொண்டாலம்பட்டி பகுதி அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மண்டலக்குழு தலைவராகவும் பணியாற்றினார்.

மேலும் அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜூலை 3-ம் தேதி இரவு 10 மணியளவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சண்முகம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென வந்த மர்மகும்பல், சண்முகத்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் முகம், கழுத்து போன்றவை சிதைக்கப்பட்ட நிலையில், சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட சண்முகத்தின் உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை சாலையிலேயே வைத்து கதறி அழுதனர். இது தவிர உடலை எடுக்க விடாமல், உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சண்முகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கொண்டாலம்பட்டி மண்டல தலைவராக இருந்த சண்முகம் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் கொலையாளியை பிடிப்பதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. சண்முகம் தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் விடுத்ததோடு, திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் சேலத்தில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பரபரப்பு உண்டாகியுள்ளது.