க்ரைம்

"மின் வாரியத்தில் வேலை வேண்டுமா...? கொஞ்சம் செலவாகும்": நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல்!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேரை, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் மோகன்(66). இவர்களது மகன், மகள், உறவினர் மற்றும் நண்பர்கள் என 10 பேர் மின் வாரியத்தில் வேலை தேடி வந்துள்ளனர்.

அந்த சமயம், சென்னையை சேர்ந்த மூன்று நபர்கள் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எங்களுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,அதற்கு பணம் செலவாகும் என தெரிவித்துள்ளனர். 

இதனை நம்பி, மொத்தம் 10 பேருக்கு, 61,50,000 பணத்தை ரொக்கமாகவும் வங்கியின் மூலமாக கொடுத்துள்ளனர்.இதன் பிறகு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக நேர்முகத் தேர்வு நடத்துவது போல போலியான பணி நியமன ஆணையையும் வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை திருப்பி கேட்டதற்கு, அதெல்லாம் தர முடியாது என கூறி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கடந்த 23ஆம் தேதி மோகன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர், புகாரை மத்திய குற்ற பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்(55), குன்றத்துரை சேர்ந்த சக்திவேல் (49), சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த விஷ்வா என்கிற விஷ்வேஷ்வரர் (32) ஆகியோரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவரை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.