வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றிய கணவன் மனைவி உட்பட மூன்று பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திலீப் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் இணையதளத்தில் கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டதாகவும் அந்த விளம்பரத்தை நம்பி தானும் மற்றும் 27 நபர்களும் பல லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த புகாரானது கடந்த மாதம் காவல் ஆணைய அலுவலகத்தில் அளித்த பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வடபழனியில் உள்ள ஆல்பா குளோபல் கனெக்சன் மற்றும் அண்ணா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா டிராவல்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெயரில் அலுவலகங்கள் நடத்தி பல இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இணையதளத்தில் பொய்யான விளம்பரங்களை கொடுத்து சுமார் 36 நபர்களிடம் தலா 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டுக்கு செல்வது போன்ற போலியான விசாவை தயாரித்து இளைஞரிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரெஜினா தலைமையான போலீசார் குற்றவாளிகளை மும்பையில் இருப்பது அடையாளம் கண்டு பின்னர் போலீசார் மும்பை சென்றனர்.
அதன் பிறகு மும்பையில் தலைமறைவாக இருந்த நிர்மலா என்கிற மலர்விழி அவரது கணவர் ஹரிஹரன் என்கிற வசந்த் ராஜா சிங் மற்றும் ஜிஜேந்தர் ராம்ஜி சர்மா என்கிற ராஜு பாய் என்கிற மூன்று பேரையும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மலா மற்றும் ஹரிகரன் ஆகியோர் கணவன் மனைவி என்பதும் அவர்களுக்கு உடந்தையாக ராஜு பாய் செயல்பட்டதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 46 பாஸ்போர்ட்டுகள், போலி விசா தயாரிப்பதற்காக பயன்படுத்திய 16 செல்போன்கள், ஆறு லேப்டாப், நான்கு வங்கி கணக்கு புத்தகம், நான்கு செக் புக், 10 ஏடிஎம் கார்டுகள் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு, மற்றும் மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கணவன் மனைவி உட்பட மூன்று பேரை மத்திய குற்ற பிரிவு ஆய்வாளர் ரெஜினா தலைமையான போலீசார் மும்பை சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறும் நபர்களிடமும், ஆன்லைன் மூலமாக வரும் விளம்பரங்கள் தொடர்பாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.