க்ரைம்

விடைக்கிடைக்காத ராமஜெயம் வழக்கு...விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

Tamil Selvi Selvakumar

ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். 

தொடர்ந்து இந்த கொலை தொடர்பான வழக்கை, சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அதற்காக புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன,  இந்நிலையில் நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராமஜெயம் வழக்கு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தி அளிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதேசமயம், வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் ஆயிரத்து 40 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.