க்ரைம்

காதல் விவகாரத்தில் இளைஞா் உயிரிழப்பு; 8 போ் கைது!

Malaimurasu Seithigal TV

காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை. காதலி, காதலியின் தந்தை, சகோதரர், கூலிப்டையினர் என மொத்தம் 8 பேர் கைது.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல் (23). தனியார் பால் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்துளளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அன்று வீட்டை விட்டு சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை.
 
இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன், வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில்
வல்லம் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த 8ம் தேதி அன்று அம்மாபேட்டை அருகே ராமுத்திரைக்கோட்டை பகுதியில் உள்ள புது ஆற்றில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சில அடையாளங்களை பார்த்து அது சக்திவேல் என்பது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் சக்திவேலுக்கும்,  அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகள் தேவிகா (19) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்நிலையில் தேவிகாவின் தந்தை பாலகுரு வல்லம்புதூர் விஏஓ வள்ளி என்பவரிடம் சரண் அடைந்துள்ளார். தொடர்ந்து சக்திவேலுவை மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து கொலை செய்ததை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். பின்னர் விஏஓ வள்ளி, வல்லம் போலீசாரிடம் பாலகுருவை ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தன் மகள் தேவிகாவை சக்திவேல் காதலித்து வந்ததை அறிந்த பாலகுருவுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது மகளை சக்திவேலுவுக்கு திருமணம் செய்து வைக்க பாலகுருவுக்கு விருப்பம் இல்லை. இதனால் தனது நண்பர் சத்யா என்பவர் மூலம் மதுரையிலிருந்து கூலிப்படையை அழைத்து வந்து வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன், வேலை பார்க்கும் கதிர்வேல் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேலுவின் உடலை ஒரு வாகனத்தில் மறைத்து எடுத்துச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் புது ஆற்றில் வீசியுள்ளனர். மேலும் அவர் வந்த பைக்கையும் ஆற்றில் வீசிவிட்டு திரும்பி உள்ளனர் என்று தெரிய வந்தது. மேலும் சக்திவேலை கொலை செய்ய தனது தந்தை திட்டம் தீட்டியது தேவிகாவிற்கும் தெரிந்துள்ளது. தொடர்ந்து சத்யா, துரைமுருகன், கதிர்வேல், தேவிகா ஆகியோரை வல்லம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் மீதி பணத்தை வாங்க வந்துள்ளனர். இத்தகவல் அறிந்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலகுரு (48), அவரது மகன் துரைமுருகன் (19), மகள் தேவிகா (20), சத்யா (34), கதிர்வேல் (45), கூலிப்படையை சேர்ந்த கிரிவாசன் (45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகிய 8 பேரையும் தஞ்சை நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் தேவிகா திருச்சி சிறையிலும், மற்ற 7 பேரும் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.