க்ரைம்

ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 75 லட்சம் ரூபாய்..! பறிமுதல் செய்த போலீசார்...!

Malaimurasu Seithigal TV

சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் நேற்று மாலை ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு நபரை பிடித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவரிடம் பாலீதின் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாக 75 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொண்டு வந்த நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சோவிக் மண்டல் (24) என்பதும், நகை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மிண்ட் தெருவில் உள்ள நகைக் கடையில் நகை வாங்குவதற்காக 75 லட்ச ரூபாய் பணம் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் 75 லட்ச ரூபாய் பணத்தை வருமானவரித் துறையினரிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.