க்ரைம்

போலீசிடம் கெத்து காட்ட நினைத்து வழக்குகளை வாங்கிய நபர்கள்!

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர்: தஞ்சையில், வாகன சோதனையின் போது பிரச்சனையில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

தஞ்சை அடுத்த சிங்கப் பெருமாள் குளம் என்ற இடத்தில் இரவு வாகன சோதனையில் காவலர் காட்டு ராஜா  ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு காரை நிறுத்த முற்பட்ட போது, அந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காரில், ஹரிபாபு மற்றும் காரல் மார்க்ஸ் என அறியப்படுகிறது. இதனால், காவலர் இரு சக்கர வாகனத்தில், துரத்தி சென்று நிறுத்தியுள்ளார்.

காரை நிறுத்தியதும், காரை ஒட்டி வந்த அந்நபரிடம், நிறுத்த சொல்ல நிற்க மாட்டீர்களா? எவ்வளவு தூரம் துரத்தி வருவது? என கேள்வி எழுப்பியுள்ளார், காவலர். இதில், ஆத்திரமடைந்த காரை ஓட்டிவந்த நபர் மற்றும் அவருடன் வந்த நபர் இருவரும், காவலரை ஆபாச வார்த்தைகளால், திட்டிவிட்டு, அங்கிருந்து செல்ல முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத காவலர், தனது செல்போனில் படம் எடுத்தவாறு, யோவ் நில்லு என்று அழைக்க, அதற்கு அந்நபர், நான் எவ்ளவு சம்பாதிக்கிறேன் தெரியுமா? நீ எவ்வளவு சம்பாதிக்கிறாய்? என ஒருமையில் பேசி காவலரை அடிக்க வந்துள்ளார். 

மேலும், இருவரும் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவ்விடத்தை விட்டு காரை எடுத்துச் சென்றனர். இந்நிலையில், தன்னிடம் இருந்த வீடியோ ஆதாரத்துடன், ஹரிபாபு மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவர் மீதும் புகார் அளித்தார். காவலர் காட்டுராஜா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, குற்றம் சாட்டப்பட்ட ஹரிபாபு மற்றும் காரல்மார்க்ஸ் இருவர் மீதும் அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 

கெத்து காட்டி பேசிய இரண்டு பேரும் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்து தற்போது பதுங்கி உள்ளனர்.