ஒரு பெண் சுற்றி இருக்கும் ஆண்களின் இச்சைகளுக்காக அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனமாடுவது இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு புதியது இல்லை.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வரும் "ஆட்டமா தேரோட்டமா" பாடல் இந்த சாயலில் தான் காட்சியாக்கப் பட்டிருக்கும். சரோஜா திரைப்படத்தில் வரும் "கோடான கோடி" பாடல், அஞ்சாதே திரைப்படத்தின் "கத்தாழ கண்ணால குத்தாத" பாடல் என தொடரும் இவற்றின் பட்டியல் புஷ்பா திரைப்படத்தில் வரும் "ஊ சொல்றியா மாமா" வரை நீளும். இந்திய திரைப்படங்களில் இவ்வகையான பாடல் காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் மிகக் குறைவு.
இவ்வகை பாடல்கள் 'ஐட்டம்' பாடல்கள் என பொதுவாக வகைபடுத்தப்படுகின்றன. பழைய பாடல் கேசட்டுகள், சிடிகள், யுடியூப் பிளே லிஸ்டுகள் என பாடல் கேட்கும் ஊடகங்களும் முறையும் மாறினாலும் இவ்வகை பாடல்கள் தனக்கான ஒரு நிலைத்த இடத்தை இன்றும் கொண்டுள்ளன.
"டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாரும் இல்ல" என அதிரடி நாயகர்கள் கவர்ச்சி உடை நடிகைகளோடு குத்தாட்டம் போடும் இவற்றை கண்டுகளிக்காத இளைஞர்கள் யாரும் இல்லை எனலாம். இளைஞர்களின் இரத்தத்திற்கு போதை ஏற்றும் இது போன்ற பாடல்கள் மறுபுறம் சமூக சீர்கேடுகளுக்கும் வித்திடுகின்றன.
ஒரு காலத்தில் அரசர்களின் அந்தப்புரங்களில் தொடங்கிய இவ்வகையான நடனங்கள் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கரகாட்டங்கள் வழியாக அனைத்து மக்களையும் வந்தடைந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கிளப்புகளில் வளர்ந்த இந்நடனங்கள் ரெக்கா டான்ஸூகளாக உருமாறி கடைசியில் ஆடலும் பாடலும் வடிவத்தை எடுத்தன.
கிராமங்களில் கோயில் திருவிழாவின் போது முன்னர் வள்ளி திருமணம், மகாபாரதம் போன்ற நாடகங்களும் தெருக் கூத்துக்களையும் நடத்தி வந்தவர்கள், தற்போது ஆடலும் பாடலும் நிகழ்ச்சியையே நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சினிமாவின் வருகையால் நசிந்து கொண்டிருந்த நாடகக் கலைகளை இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளின் வருகை அழித்தே விட்டன.
கூத்துக்களை போலவோ, நாடகத்தை போலவோ சொந்தமாக கருத்துகளையோ வசனங்களையோ கொண்டிராத ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் வெறும் நடன அசைவுகளை மட்டுமே கொண்டதாகும். இதுவும் கூட ஏற்கனவே திரையில் சிறப்பாக காட்டப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இக்கலைஞர்கள் ஆபாசத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இது போன்ற ஒரு ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ரீட்டாவின் ஆட்டத்தை பார்ப்பதற்காக சிவகார்த்திக்கேயனும் சூரியும் செய்யும் சேட்டையான போராட்டங்களை வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நான் காணலாம். அவற்றை வெறும் திரைப்பட காட்சிகளாக மட்டும் நாம் கருத முடியாது. தற்கால கிராமத்து இளைஞர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அக்காட்சிகள் உள்ளது.
ஒரு பெண்ணை அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனமாட வைத்து அதனை கூட்டாக சுற்றி நின்று ரசிக்கும் வக்கிரமான இந்த மனநிலைதான் பெண்களுக்கான எதிரான குற்றங்களை கூட்டாக இழைக்கும் நிலைக்கு அடித்தளமாக அமைகின்றது. இதனால்தான் கடந்த ஆண்டு இதனை தடை செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அவற்றை சில கிராமத்தை சேர்ந்த இளந்தாரி பயல்களும் மைனர்களும் மதிப்பதே இல்லை. அவ்வாறான ஒரு சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெருவு கிராமத்தில் நடந்தேறியுள்ளது.
கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம் ஆடக்கூடாது என நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் நாயனசெருவு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் அரங்கேறியுள்ளது. நடன நாட்டியாலயா என நவீன பெயரிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் கேரளா மற்றும் தமிழ்நாடு என இரு மாநிலங்களை சேர்ந்தவர்களும் நாட்டிய கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கோயில் திருவிழாவில் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர் அப்போது நடைபெற்ற நடன நாட்டியாலயாவில் மிகவும் அரைகுறையாக பெண்கள் ஆடைகள் அணிந்து சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனமாடினர்.
மேலும் திருவிழாக்களில் ஆபாசமாகவும் பெண்களுக்கு எதிரான குற்றத்தை தூண்டும் வகையிலும் இது போன்ற நடனங்களை தடை செய்த உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும். அதனை மீறுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.