கவர் ஸ்டோரி

பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன நோக்கத்துடன் இது செயல்படுகிறது? தெரிந்துகொள்வோம்....!!!

Malaimurasu Seithigal TV

தீவிரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அனைத்து மாநிலங்களின் ஏஜென்சிகளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கைது செய்துள்ளன. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்? அது ஏன் தடை செய்யப்பட்டது? என்பதை தெரிந்துகொள்வோம்....


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 17 பிப்ரவரி 2007 அன்று உருவாக்கப்பட்டது.  தென்னிந்தியாவின் மூன்று முஸ்லிம் அமைப்புகளை இணைத்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. கேரளாவின் தேசிய ஜனநாயக முன்னணி, கர்நாடகா மன்றம் மற்றும் தமிழ்நாட்டின் மனித நீதி பாசறை ஆகியவை இதில் அடங்கும். தற்போது இந்த அமைப்பு நாட்டின் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கூறுகிறது.

நாட்டில் மாணவர் இஸ்லாமிய இயக்கம்  தடை செய்யப்பட்ட பிறகு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வேகமாக விரிவடைந்தது. இந்த அமைப்பு கர்நாடகா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிக பிரபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் இது பல கிளைகளையும் கொண்டுள்ளது. அதன் உருவாக்கம் முதலே பிஎஃப்ஐ மீது சமூக விரோத மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் அதிக அளவில் உள்ளன.

பிஎஃப்ஐக்கு நிதியுதவி:

கடந்த ஆண்டு பிப்ரவரியில், பணமோசடி வழக்கில் பிஎஃப்ஐ மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பேர் மீது அமலாக்க இயக்குனரகம்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.  அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில், பிஎஃப்ஐ-ன் தேசிய பொதுச் செயலாளர் கே.ஏ.ரவூப் வளைகுடா நாடுகளில் வணிக ஒப்பந்தங்கள் என்ற போர்வையில் பிஎஃப்ஐ-க்காக நிதி சேகரித்தது தெரியவந்தது. இந்த பணம் வெவ்வேறு வழிகளில் பிஎஃப்ஐ மற்றும் சிஎஃப்ஐ உடன் தொடர்புடைய நபர்களுக்கு அனுப்பப்பட்டது.  

1.36 கோடி ரூபாய் கிரிமினல் வழியில் பெறப்பட்டதாக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதி இந்தியாவில் பிஎஃப்ஐ மற்றும் சிஎஃப்ஐ இன் சட்டவிரோத நடவடிக்கைகளை நடத்துவதற்கு செலவிடப்பட்டது எனவும் 2020ல் டெல்லியில் நடந்த கலவரம், சிஏஏவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. 2013க்குப் பிறகு பிஎஃப்ஐகளின் பணப் பரிமாற்றம் மற்றும் பண வைப்பு நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இந்தியாவில் உள்ள பிஎஃப்ஐக்கு ஹவாலா மூலமும் பணம் வருகிறது என்று அமலாக்க இயக்குநரகம் கூறியுள்ளது.
 
பிஎஃப்ஐ அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள்:

பிஎஃப்ஐ ஒரு தீவிர நோக்கம் கொண்ட அமைப்பு. 2017 ஆம் ஆண்டு, இந்த அமைப்பை தடை செய்யக் கோரி உள்துறை அமைச்சகத்திற்கு என்ஐஏ கடிதம் எழுதியது. வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் அமைப்பு குறித்து என்ஐஏ விசாரணை செய்தது.

என்ஐஏ அறிக்கையின் படி, இந்த அமைப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும்  முஸ்லிம்கள் மீது மதத்தை திணித்து அவர்களை மதமாற்றம் செய்ய வற்புறுத்துகிறது எனவும் தெரிவிக்கிறது. ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி முகாமை பிஎஃப்ஐ நடத்துவதாகவும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அமைப்பு இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபடவும் தூண்டுகிறது எனவும் தெரிவித்துள்ளது என்ஐஏ.

பிரதமர் மோடியும் இலக்கு:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றி அமலாக்க இயக்குனரகம் மற்றொரு பரபரப்பான தகவலையும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியை தாக்குவதற்கு பிஎஃப்ஐ ஆபத்தான திட்டத்தை தீட்டியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்காக பாட்னாவில் பயிற்சி முகாமையும் ஏற்பாடு செய்து பல உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியை அந்த அமைப்பு செய்திருந்தது. பிரதமர் மோடியின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது

பிஎஃப்ஐ  அரசியலில் பங்கேற்பு:

பிஎஃப்ஐ அதனை ஒரு சமூக அமைப்பு என்று அழைக்கிறது. இந்த அமைப்பு இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை. இந்த அமைப்பின் உறுப்பினர்களின் பதிவுகள் கூட பராமரிக்கப்படுவதில்லை. இதனால், எந்த குற்றத்தில் இந்த அமைப்பின் பெயர் வந்தாலும், இந்த அமைப்பின் மீது சட்ட ஏஜென்சிகள் கடும் நடவடிக்கை எடுப்பது கடினம். 21 ஜூன் 2009 அன்று, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) என்ற அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பிஎஃப்ஐ உடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. SDPI க்காக களத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பிஎஃப்ஐ  உடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது. 13 ஏப்ரல் 2010 அன்று, தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை வழங்கியது. 

SDPI அரசியல் வெற்றிகள்:

கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த SDPI கட்சி செயல்பட்டு வந்தது.  குறிப்பாக இந்த கட்சியின் செல்வாக்கு தென்கரை கன்னடத்திலும் உடுப்பியிலும் காணப்பட்டது.  இந்தப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. 2013 வரை, கர்நாடகாவில் சில உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட SDPI ,  21 இடங்களில் வெற்றி பெற்றது. 2018ல் 121 உள்ளாட்சி இடங்களை வென்றது. 2021 இல், உடுப்பி மாவட்டத்தில் மூன்று உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றியது.

2013 கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக இக்கட்சி மொத்தம் 23 இடங்களில் அதன் வேட்பாளர்களை நிறுத்தியது.  நரசிங்கராஜ் சட்டமன்றத் தொகுதியில் SDPI வேட்பாளர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்களை இழந்தனர். 

2014 மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு SDPI வேட்பாளர்களை நிறுத்தியது. அனைத்து இடங்களிலும் அதன் வேட்பாளர்கள் டெபாசிட்களை இழந்தனர். 2019 மக்களவைத் தேர்தலில்14 மக்களவைத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அனைத்து இடங்களிலும் அதன் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பிஎஃப்ஐக்கும் SIMI க்குமான தொடர்பு:

பெரும்பாலும் பிஎஃப்ஐ என்பது சிமியின் மாற்றப்பட்ட வடிவம் என்று கூறப்படுகிறது. உண்மையில், 1977 முதல் நாட்டில் செயல்பட்டு வந்த சிமி, 2006ல் தடை செய்யப்பட்டது. SIMI தடை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகுதான் பிஎஃப்ஐ நடைமுறைக்கு வந்தது. இந்த அமைப்பின் செயல்பாடும் சிமியை போலவே இருப்பதாக கூறப்படுகிறது. 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த அமைப்பின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

                                                                                               -நப்பசலையார்