கவர் ஸ்டோரி

நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கும் சசிகலா...திவாகரன் பேச்சு!

Malaimurasu Seithigal TV

சசிகலா தாம் இன்று வரை அஇஅதிமுக-வின் பொதுச்செயலாளராக நீடிப்பதாகக் கூறி வருகிறார். அது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு அதிமுக பல்வேறு தரப்பாக பிரிந்தது. அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலாவின் சகோதரர் திவாகரனும், அவரது சகோதரி மகன் தினகரனும் தனித்தனியாக செயல்பட ஆரம்பித்தனர்.

திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்சினை தீவிரிமடைந்துள்ள இச்சூழலில் அவர் தனது கட்சியை சசிகலா தலைமையிலான அஇஅதிமுக-வில் இணைப்பதாகத் தெரிவித்தார். அதன் இணைப்பு விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

திவாகரன் பேச்சு

இணைப்பு விழாவில் திவாகரன் பேசியதாவது, அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகளை பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவிடம் ஒப்படைப்பதாகக் கூறினார். அஇஅதிமுக ஒவ்வொரு முறை சரிந்து விழும் போது அதைத் தூக்கி நிறுத்தியவர் சசிகலா. நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருக்கும் சசிகலா அவருக்கு நம்முடைய உதவி தேவை. அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தமது பொறுப்பிலிருந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பேசினார்.

சசிகலா பேச்சு

இந்நிகழ்வில் சசிகலா பேசியதாவது, கட்டுக்கோப்பான இயக்கம் எதிரிகளின் சூழ்ச்சியால் சிதறிப்போனது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக எத்தனையோ சோதனைகளை சந்தித்தது. பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாகக் கற்றுக்கொண்டு விட்டேன். இரு அணியாகப் பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு நம் கட்சிக்காரர்கள் என்று தான் பார்த்தோம்.

அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதே என் லட்சியம். அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மக்கள் விரோத திமுகவை விரட்டியடிப்பது தான். அஇஅதிமுக-வை மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற்றுவது தான் அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற கழக தொண்டர்களை ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த அஇஅதிமுகவை உருவாக்கும் வரை ஓயமாட்டேன் என சசிகலா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.