கவர் ஸ்டோரி

ட்விட்டரில் முதல் 5 இடங்களை பிடித்த முதலமைச்சர்கள்...முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிடித்த இடம் என்ன??!!

Malaimurasu Seithigal TV

ட்விட்டர் எலோன் மஸ்க்கால் கையகப்படுத்தப்பட்டதில் இருந்து  நிறைய விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன.  ப்ளூ டிக், யெல்லோ டிக் முதல் பயனாளர்களிடம் பணம் வசூல் செய்வது வரை பல சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 

முதல் மூன்று:

தனியார் நிறுவனத்தின் அறிக்கையின் படி, மொத்தம் ஏழு கோடியே 69 லட்சம் பயனாளர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.  ஐந்து கோடியே 89 லட்சம் ட்விட்டர் பயனாளர்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவைப் பற்றி பேசினால், மொத்தம் 2 கோடியே 36 லட்சம் மக்கள் இங்கு ட்விட்டரைப் பயன்படுத்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.  ட்விட்டரை பயன்படுத்துவர்களில் சாமானியன் முதல் உலகின் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் வரை உள்ளனர்.

ட்விட்டரில் முதலமைச்சர்கள்:

இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.  இதில் சிலர் விதிவிலக்காக இருப்பினும் பயன்படுத்துபவர்கள் அவர்களை மக்களுடன் இணைக்கும் ஒரு பாலமாக ட்விட்டரை எண்ணுகின்றனர்.  

டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.   இவரைத் தொடர்ந்து எந்தெந்த மாநில முதலமைச்சர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்பதை விவாதிக்கலாம்.....

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 2 கோடியே 67 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.   2011ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த கெஜ்ரிவால், 216 பேரை பின்தொடர்ந்து வருகிறார்.
 
யோகி ஆதித்யநாத்: 

உத்தரபிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத்தை இரண்டு கோடியே 28 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.  2015ல்  ட்விட்டரில் இணைந்த யோகி ஆதித்யநாத்52 பேரை பின்தொடர்கிறார்.
 
சிவராஜ் சிங் சவுகான்: 

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் 2013 இல் அவரது ட்விட்டர் பயணத்தை தொடங்கினார்.  சவுகானை தற்போது 80 லட்சத்து 80 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.  முதலமைச்சர் சிவராஜ் ட்விட்டரில் 394 பேரை பின் தொடர்கிறார். 

நிதிஷ் குமார்: 

பாஜகவிலிருந்து பிரிந்து பிரதமர் கனவுடன் மெகா கூட்டணியுடன் இணைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ட்விட்டர் கணக்கில் மொத்தம் 80 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.  2010ல் ட்விட்டர் கணக்கை தொடங்கிய நிதிஷ் குமார்  43 பேரை பின் தொடர்கிறார். 

மம்தா பானர்ஜி: 

பாஜகவுக்கு எப்போதும் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்து அறிக்கைகளால் எப்போதும் பேசுபொருளாகவே இருக்கிறார்.  அவரை 70 லட்சம் மக்கள் பின் தொடர்வதன் மூலம் இந்த பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.  2014ல் மம்தா ட்விட்டர் கணக்கை தொடங்கிய இவர் மொத்தம் 47 பேரைப் பின்தொடர்கிறார்.
 
அசோக் கெலாட்: 

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் உள் மாநில பிரச்சினைகளால் தேர்தலில் இருந்து பின் வாங்கினார்.  பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது ராஜஸ்தான் முதலமைச்சராகவே தொடர்கிறார்.  அவரை  ட்விட்டரில் மொத்தம் 40 லட்சத்து முப்பதாயிரம் பின்தொடர்கின்றனர்.  2011ல் ட்விட்டரில் இணைந்த அசோக் 106 பேரை பின் தொடர்கிறார்.

மேலும் தெரிந்துகொள்க:  முட்கள் நிறைந்த கிரீடத்தை ஏற்க தயங்கும் அசோக் கெலாட்!!!
 
மு.க.ஸ்டாலின்: 

சட்டமன்ற தேர்தல் 2021ல் வெற்றி பெற்று முதலமைச்சரான மு. க. ஸ்டாலின் பல போராட்டங்களுக்கு பிறகே இந்த நிலையை அடைந்தார்.  முதலமைச்சராகி ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் 34 லட்சம் ஃபாலோயர்களுடன் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 2013-ம் ஆண்டு முதல் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.   ஸ்டாலின் மொத்தம் 88 பேரை பின்தொடர்கிறார்.

ட்விட்டரில்லா முதலமைச்சர்:

பெரும்பாலான முதலமைச்சர்கள் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பினும் சில முதலமைச்சர்கள் ட்விட்டரில் கணக்கை கூட தொடங்கவில்லை.  அவர்களில் முக்கியமானவர் சமீபத்தில் தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றிய தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ்.  

ஆனால் அவர் அளித்த தகவலின் படி தெலுங்கானா முதலமைச்சருக்கான அலுவலக ட்விட்டர் பக்கத்தில் அவர் ஆக்டிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  அந்த பக்கத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

-நப்பசலையார்