கவர் ஸ்டோரி

பேரடியாக விழுந்த தீர்ப்பு...கண்டிப்பா இதை செய்வோம்...திருமா பரபரப்பு பேட்டி!

Tamil Selvi Selvakumar

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேல்முறையீடு செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருக்கிறார்.

எதிர்பார்ப்புகளிடையே வெளியான தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்த வழக்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூகநீதி கோட்பாட்டுக்கு எதிரானது:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அதில் 3 நீதிபதிகள் செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பு அளித்துள்ளனர். இது சமூகநீதி கோட்பாட்டுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம்:

தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை, ஆனால் இந்த தீர்ப்பானது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஏழைகளுக்கு மட்டும் வழங்குவதாக அமைந்துள்ளது. இந்த சட்டத்தில் சமூக நீதி கோட்பாடு என்பது பின்பற்ற படவில்லை. இந்த தீர்ப்பானது சமூகநீதி கோட்பாட்டின் மீது விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுவதாகவும், இதுவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும் என்று கூறினார். 

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு:

அதேபோன்று இந்த தீர்ப்பானது, சனாதனவாதிகள் எல்லா துறைகளிலும் நிறைந்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வை தாண்டி ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.