அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து எடப்பாடி தரப்புக்கு மட்டுமல்லாமல், ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சி பூசல்:
அதிமுகவில் யாருக்கு தலைமை என்ற அதிகாரப்போட்டி உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் அதிமுகவை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும், இது நம்பிக்கை துரோகம் என ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:
இந்த அதிகாரப்போட்டி ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் திமுக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அதிமுகவிடம் இறக்கி வருகிறது. கடந்த ஆட்சியின் போது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இரு முறை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக எஸ்.பி.வேலுமணி வீடுகளிலும், விஜயபாஸ்கர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’
திமுகவை ஆதரிக்கும் ஓபிஎஸ்:
இதனிடையே, திமுகவின் எதிர்க்கட்சியாக செயல்படும் அதிமுகவின் பிரதான கொள்கைகளில் ஒன்றான திமுக எதிர்ப்பு கொள்கையிலிருந்து ஓபிஎஸ் விலகி விட்டதாகவும், வெளிப்படையாகவே முதலமைச்சரை பாராட்டுவதாகவும், அதிமுகவுக்கு எதிராக செயல்படுவதாகவும் ஏற்கனவே அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்ஸின் கருத்து ஈபிஎஸ் தரப்பு மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பினரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஓபிஎஸ் கருத்து:
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு தனது கடமையை செய்கிறது. எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
அதிர்ச்சியில் நிர்வாகிகள்:
திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருப்பது ஈபிஎஸ் தரப்பு மட்டுமல்லாமல் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகளுக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உடனான விவகாரம் உட்கட்சி பிரச்சனை என்ற நிலையில் அதிமுகவின் எதிரியான திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஓபிஎஸ் துணை போவது போல பேசுகிறார் என இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலரும் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் அறிந்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு," பார்த்தீர்களா? இதே நிலைதான் நாளை உங்களுக்கும்!" என அவர்களை தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.