செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் சுரேந்தர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சமீபகாலமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சுரேந்தர் மாயமானதாக கூறப்பட்டது. அவரைத் தேடி உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், சுரேந்தர் வசித்து வந்த வீடு 2 நாட்களாக பூட்டப்பட்டிருப்பதை கண்டனர்.
மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுரேந்தரின் பிணம் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மதுராந்தகம் போலுசார் சுரேந்தரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த தலைமை காவலர் சுரேந்தர் சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பணியின்போதே மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டதன் காரணமாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். ஏற்கெனவே மனைவியை பிரிந்த சுரேந்தருக்கு, பணியிடை நீக்கத்தால் விரக்தியடைந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.