கவர் ஸ்டோரி

மறுக்க முடியாத ஆளுமையின் மறைக்கப்பட்ட வரலாறு ------- மேயர் சிவராஜ்

Malaimurasu Seithigal TV

மறுக்க முடியாத ஆளுமையின் மறைக்கப்பட்ட வரலாறு-மேயர் திரு ந. சிவராஜ்

1892 செப்டம்பர் 29 - 1964 செப்டம்பர் 29

இவரை நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும்?

சென்னையின் முன்னாள் மேயர், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் திரு ந.சிவராஜ். 1892 செப்டம்பர் 29ஆம் நாள் சென்னையில் பிறந்த இவர், 1964 செப்டம்பர் 29இல் பிறந்த அதே நாளில் மறைந்தவர்.

தமிழ்நாட்டில் பிறந்து, பிறந்த சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் உழைத்த பல்வேறு தலைவர்களை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது என்றும் சொல்லலாம். அல்லது இவரைப் போன்ற பல தலைவர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டது என்றும் கொள்ளலாம்.

அப்படி நாம் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட சிலரில், சென்னையின் மேயராக இருந்த திரு சிவராஜ் அவர்களைக் குறித்து சில செய்திகளை நாம் தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில் 

சென்னையில் பிறந்து இவர் தனது நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயேப் பயின்றார். பின் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் சேர்ந்த இவர், பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்று பின்னர் வெஸ்லி கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதற்குப்பின் 1917-ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 1925 இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராக உயர்ந்தார்.

அண்ணலின் தங்கையை மணம் முடித்தவர்

1918 ஜூலை 10ஆம் நாள், அவரது 26ஆவது வயதில் மீனாம்பாள் என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். பெரும் வணிகராகவும், செல்வாக்கு மிக்க மனிதராகவும் இருந்த ரங்கூன் பி.எம்.மதுரைப்பிள்ளை என்பாரின் மகளுக்கும், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், அன்றைய புகழ்பெற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகவும் திகழ்ந்த வி.ஜி.வாசுதேவப் பிள்ளைக்கும் மகளாக பிறந்தவர் திருமதி மீனாம்பாள் சிவராஜ். இவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களால் தங்கை என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

பாபா சாகேப்பின் நம்பிக்கை நாயகன்

1937இல் தன்னுடைய சட்டக் கல்லூரி பேராசிரியர் பதவியை விட்டு விலகி முழுநேர அரசியலில் பங்கேற்றார். தொடக்கத்தில், 'பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்று சொல்லப்பட்ட நீதிக் கட்சியில் பெரியாருடன் இணைந்து தீவிரமாக பணியாற்றினார்.

அண்ணல் அம்பேத்கரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தபோது, அவர்களின் செயல்பாட்டை சென்னை மாகாண மக்களிடையே கொண்டு சேர்த்தவர் திரு சிவராஜ்.

 1942இல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அனைத்திந்திய பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பை தொடங்கியபோது, சிவராஜ் அவர்களை கூட்டமைப்பின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்தார். தொடர்ந்து இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்த இவர், பாபா சாகேப் அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னால் அவரது கனவை நினைவாக்கும் வண்ணம் இந்தியக் குடியரசுக் கட்சியினை உருவாக்கி அதனுடைய அகில இந்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாத்தா இரட்டைமலையின் அன்பிற்குரியவர்

நாகரிக உலகத்துக்கு ஏற்ற உடையும், அன்பும்-அமைதியும் நிறைந்த உரையாடலும், பட்டப்படிப்பும், சட்டப் படிப்பும், சமுதாயத்தின் மேல் இருந்த அக்கறையும், சிக்கலான பிரச்சினைகளை அணுகுவதில் அவருக்கிருந்த நிதானமானப்  போக்கும், பல்வேறு துறைகளில் இருந்த பட்டறிவும், வயதுக்கு மீறிய பக்குவமும் நிறைந்திருந்தக் காரணத்தினால், அன்றைக்கு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த  இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அன்புக்கு உகந்தவராக விளங்கினார்.

பெண்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தவர்

தான் பிறந்த குறிப்பிட்ட ஒரு சமூக மக்களுக்காக மாத்திரமல்லாமல் பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் திரு சிவராஜ் நமச்சிவாயம் அவர்கள்.

ஆம்... 1928 மார்ச் 27இல் சென்னை சட்டமன்றத்தில், பால்ய விவாகம் எனப்படும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்றால், பெண்களின் திருமண வயது 16 எனவும் ஆண்களுக்கான திருமண வயது 21 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு தீர்மானத்தை அன்றைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது அதனை ஆதரித்துப் பேசியவர் இவர்.

மன்னர்களை வசப்படுத்திய பார்ப்பனர்கள்

1928இல் நீதிக்கட்சி அமைச்சரவையில் இருந்த திரு. முத்தையா முதலியார் அவர்களால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி ஆணையை எதிர்த்து, அன்றைய ஆதிக்க சக்திகளின் அடையாளமாக விளங்கிய திரு சத்தியமூர்த்தி அய்யர் பேசியபோது,  கல்வித் துறையிலும், வேலை வாய்ப்பிலும் பார்ப்பனர் ஆதிக்கம் நிரம்பி வழிவதை சுட்டிக்காட்டி, வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீட்டு உரிமையின் தேவையை வலியுறுத்திப் பேசியவர் இவர்.

தமிழ்நாட்டின் முடியாட்சிக் காலத்தில் அன்றைய மன்னர்களை வசப்படுத்தி பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அன்றைக்கு இருந்த நீதிக்கட்சி அரசு கையகப்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு வழங்க முடிவெடுத்தது. அதற்காக, 'இனாம் நிலம் ஒழிப்பு' என்கிற மசோதாவை 1933இல் பொப்பிலி அரசர் கொண்டு வந்த போது அதன் அவசியத்தை வலியுறுத்தி பேசி அந்த சட்டம் நிறைவேற துணையாக இருந்தவர் இவர்.

படையாட்சிகளுக்கும் பட்டியலினத்தவருக்கும் துணை நின்றவர்

தென்னார்க்காடு மாவட்டத்தில் வாழ்ந்துவந்த 'படையாட்சிகள்' என்கிற பிரிவினர் குற்றப்பரம்பரை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களை அந்த பட்டியலில் இருந்து நீக்கி சமூக அந்தஸ்து உடையவர்களாக வாழ்வதற்கு வழிவகை செய்யும் ஒரு தீர்மானத்தை 1935 இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்தவர் இவர்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியான பச்சையப்பன் கல்லூரியில், 1928ஆம் ஆண்டு வரை பட்டியலின வகுப்பில் பிறந்த எவரையும் மாணவராக சேர்த்துக் கொள்ளாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையை மாற்றிட பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் மீது வழக்கு தொடுத்து அந்த வழக்கில் நேரடியாக வாதாடி வென்று ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் அக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கி தந்தவர் இவர்.

சிவராஜ் நமச்சிவாயம் வகித்தப் பதவிகள்

1926 முதல் 1936ஆம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவையின் உறுப்பினர்.

1945 நவம்பர் முதல்1946 நவம்பர் வரையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மாநகர மேயர்.

1957 இல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சிவராஜ்.

சென்னையின் வளர்ச்சியில் மேயரின் பங்கு

சிவராஜ் மேயராக இருந்த ஓராண்டு காலத்தில் சென்னையின் வளர்ச்சியில் அளப்பரிய அக்கறை செலுத்தினார். அவருடைய முயற்சியினால் வளர்ச்சிபெற்ற சென்னை குறித்து அறிந்து கொள்ள ரிப்பன் மாளிகை கட்டிடத்தில் உள்ள ஆவணங்கள் இன்றளவும் சான்றாக இருக்கின்றன.

தரமான சாலைகளும், இருள் நீக்கும் விளக்குகளும் மாத்திரமல்ல.. சென்னை மக்கள் ஓய்வெடுக்க அழகான பூங்காக்களை பல்வேறு இடங்களில் அமைத்தவர் இவர் தான். சென்னை தியாகராய நகரில் இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்ற 'நடேசன் பூங்காவும்' சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 'நேப்பியர் பூங்காவும்' இன்றைக்கும் இவரது உருவாக்கத்திற்கு சான்றாகத்  திகழ்கின்றன.

மக்கள் விளையாட்டு அரங்கம் (People's stadium) என்கிற பெயரில் ஒரு பிரமாண்டமான விளையாட்டு மைதானம் சென்னையில் இருந்தது உங்களுக்கு தெரியுமா?

1960ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவருக்கும் இந்த பெயரோ, அது இருந்த இடமோ தெரிந்திருக்க நியாயமில்லை. தெரியும்படி சொல்லவேண்டும் என்றால் அதுதான் இப்போது இருக்கக்கூடிய 'நேரு விளையாட்டு அரங்கம்'.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு காலத்தில் அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் மிகப்பெரிய குளம் ஒன்று இருந்தது.  அதன் அருகில் பீப்பிள்ஸ் பார்க் என்று அழைக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு பூங்கா ஒன்று அன்றைக்கு  வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது. அதனையொட்டி காலியாக இருந்த இடத்தில் தான் பல ஆண்டுகளுக்கு முன்னர் எரிந்து போன பழைய மூர் மார்க்கெட்டும்,  இன்றைக்கு இல்லாமல் போன மிருகக்காட்சிசாலையும் இருந்தது. இப்போது இருக்கிற மூர் மார்க்கெட் வணிக வளாகம் அல்லிக் குளத்தை தூர்த்து அமைக்கப்பட்ட புதிய வளாகம் ஆகும்.

நேரு ஸ்டேடியமாக மாறிய பீப்பிள்ஸ் ஸ்டேடியம்

பீப்பிள்ஸ் பார்க் என அழைக்கப்பட்ட அந்த பூங்காவின் அருகில் தான் சென்னை நகர மக்களுக்கு பயன்படுகிற வகையில்  மிகப்பெரிய விளையாட்டு திடலை அமைப்பதற்கு வெள்ளையர் ஆட்சியில் இருந்த சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டது. திட்டமிடப்பட்டு கால்நூற்றாண்டு கழிந்த நிலையிலும் அது ஏட்டளவிலேயே இருந்து வந்த நிலையில் மாநகரின் மேயராக திரு சிவராஜ் அவர்கள் பொறுப்பை ஏற்கிறார்.

அந்தக் காலத்தில்தான் ஏறத்தாழ 35 ஆயிரம் பேர் அமரக் கூடிய அளவிற்கு ஒரு மிகப்பெரிய விளையாட்டுத்திடல் சுமார்  11இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. சரியாக 10 மாத காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த விளையாட்டு திடலின் பணிகளுக்காக ராணுவ வீரர்களும் பெருமளவு தங்களது பங்களிப்பை தந்தனர்.

சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள், கிரிக்கெட், கால்பந்தாட்டம் ஆகியவை நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானம் பீப்பிள்ஸ் பார்க் அருகில் அமைந்த காரணத்தினால்  பீப்பிள்ஸ் ஸ்டேடியம் என்றே அழைக்கப்பட்டது.

சென்னை மாநகர மேயர் திரு சிவராஜ் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானம் அன்றைக்கு மிகப்பெரிய சாதனையாக பொதுமக்களால் பேசப்பட்டது.

உத்தரவிட்ட முதலமைச்சர் பக்தவத்சலம் 

1964 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவின் மறைவையொட்டி அன்றைக்கு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் பீப்பிள்ஸ் ஸ்டேடியம் என்கிற பழமையான பெயரை 'நேரு ஸ்டேடியம்' என மாற்றி வைக்க உத்தரவிட்டார்.

27 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, நேரு விளையாட்டு அரங்கத்தினை புதிதாக மாற்றியமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஏற்கனவே இருந்த விளையாட்டு அரங்க கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு, 1993 ஜனவரியில் புதிய விளையாட்டு மைதானம் நேரு ஸ்டேடியம் என்கிற அதே பெயரில் திறக்கப்பட்டது.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

உலக வழக்கு என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், சென்னை நகர மக்களின் மேல் அக்கறை கொண்டு, 25 ஆண்டு காலத்திற்கு மேலாக கிடப்பில் கிடந்த ஒரு திட்டத்தை தன்னுடைய காலத்தில் உருவாக்கியவர் அன்றைய மேயர் திரு சிவராஜ் அவர்கள்.

புதிய விளையாட்டு அரங்கத்தை உருவாக்கி திறந்து வைத்த இவர்கள், ஏற்கனவே 1946இல் திறக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தின் அடையாளமாகத் திகழ்ந்த கல்வெட்டை மீண்டும் வைக்காமல் அப்புறப்படுத்தியது என்பது வருத்தத்திற்குரியது மாத்திரமல்ல, மகத்தான மனிதர்களின் வரலாற்றை மறைக்கக் கூடிய ஒரு இழிவான செயல் என்றே கருதவேண்டியிருக்கிறது.

பிரித்தானிய அரசு தந்த கௌரவப் பட்டம்

ஆதிக்கத்தின் கை ஓங்கும் போதெல்லாம் அதற்கெதிராய் குரல் கொடுத்தும் சட்டரீதியானப் போராட்டங்களை நடத்தியும் மறுக்கப்பட்ட உரிமைகளை தன் மக்களுக்காகப் பெற்று தந்த சிவராஜிற்கு பிரித்தானிய அரசு இராவ் பகதூர் பட்டம் அளித்துப் கௌரவித்தது.

உண்மையை யார் மறுத்தாலும், மறைத்தாலும்  வரலாற்றில் அழிக்க முடியாத மனிதர்களாகவே மேயர் சிவராஜ் போன்ற தலைவர்கள் என்றைக்கும் இருப்பார்கள் என்பது காலம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.

------- அறிவுமதி அன்பரசன்