ஹிமாச்சல பிரதேசத்தின் 15வது முதலமைச்சராக் சுக்விந்தர் சிங் சுகு இன்று பதவியேற்றுள்ளார். மாநிலத்தின் முதல் துணை முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இதுவரை நடந்த தேர்தல்களின் முழுமையான வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எத்தனை முறை தேர்தல் நடத்தப்பட்டது, எந்தக் கட்சி வெற்றி பெற்றது? அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் யார்? இன்னும் பல செய்திகள்....
முதல் தேர்தல்:
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தேர்தல் 1952 இல் நடைபெற்றது. 15 ஏப்ரல் 1948 அன்று, இமாச்சலப் பிரதேசம் ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசாக மாறியதும், இமாச்சலப் பிரதேசம் 'சி' பிரிவு மாநில அந்தஸ்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 1952ல் மாநிலத்தில் முதன்முறையாக தேர்தல் நடைபெற்றது.
வெற்றி தோல்விகள்:
அப்போது மாநிலத்தில் 36 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. காங்கிரஸைத் தவிர, கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி, பட்டியலிடப்பட்ட ஜாதி கூட்டமைப்பு வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். காங்கிரஸ் 35 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தி 24 இடங்களில் வெற்றி பெற்றது. கிசான் மஸ்தூர் கட்சியின் 22 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர் அதில் மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். மேலும் எட்டு சுயேச்சை வேட்பாளர்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் வெற்றி பெற்றனர்.
முதல் முதலமைச்சர்:
இமாச்சல பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக காங்கிரஸின் யஷ்வந்த் சிங் பர்மர் பதவியேற்றார். 1956 வரை, அதாவது நான்கு ஆண்டுகள் 237 நாட்கள், அவர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார்.
மீண்டும் யூனியன் பிரதேசம்:
இதையடுத்து சட்டசபையை கலைத்து இமாச்சல பிரதேசம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்த நிலை 1963 வரை தொடர்ந்தது. பின்னர் அது மீண்டும் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
மீண்டும் ஒருமுறை:
பின்னர் யூனியன் பிரதேசத்திலும் யஷ்வந்த் சிங் பர்மர் முதலமைச்சரானார். ஜூலை 1, 1963 முதல் மார்ச் 4, 1967 வரை யூனியன் பிரதேசத்தின் முதல்வராகப் பதவி வகித்தார் யஷ்வந்த் சிங்.
மீண்டும் மீண்டும்:
60 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு 1967ல் தேர்தல் நடந்தது. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனசங்கம் முதன்முறையாக ஹிமாச்சல் தேர்தலில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சியின் கணக்கிற்கு சென்றது.
16 சுயேச்சை வேட்பாளர்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். யஷ்வந்த் சிங் பர்மர் மூன்றாவது முறையாக ஹிமாச்சல் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். 1977 வரை அந்தப் பதவியில் தொடர்ந்தார்.
மாநில அந்தஸ்து:
இதற்கிடையில், ஹிமாச்சலப் பிரதேசம் 1971 இல் முழு மாநில அந்தஸ்தைப் பெற்றது. அதன் பிறகு 1972ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸே வெற்றி பெற்றது. 1972ல் நடந்த தேர்தலில் 68 இடங்களில் 53 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஐந்து பாரதிய ஜனசங்க வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
சமன் செய்யப்பட்ட தேர்தல்:
1998ல் நடைபெற்ற ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் மிகவும் சுவாரஸ்யமானது. அப்போது 68 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே சமநிலை ஏற்பட்டது. இரு கட்சிகளும் 31-31 இடங்களில் வெற்றி பெற்றன. அதாவது இரு கட்சிகளாலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. பெரும்பான்மைக்கு 35 இடங்கள் தேவைப்பட்டன. ஆனால், அப்போது பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்தது. ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களின் பலத்துடன் பிரேம் குமார் துமால் அப்போது முதலமைச்சரானார்.
இமாச்சலப் பிரதேசத்தில் 1982-ம் ஆண்டு பாஜக முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. அப்போது அக்கட்சியின் 29 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முன் 1967 மற்றும் 1972ல் பாரதிய ஜனசங்கமும், 1977ல் ஜனதா கட்சியும் காங்கிரசுடன் போட்டியிட்டன.
நீண்டகால ஆட்சி:
காங்கிரஸ் நீண்ட காலம் ஹிமாச்சல பிரதேசத்தை ஆட்சி செய்தது. இதில், அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனை வீர் பத்ரா சிங் பெயரில் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக 21 ஆண்டுகளுக்கும் மேலாக வீர் பத்ரா சிங் இருந்துள்ளார்.
ஐந்து முறை ஹிமாச்சல பிரதேச முதலமைச்சராக இருக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதற்கு முன், காங்கிரசை சேர்ந்த யஷ்வந்த் சிங் பர்மர், 18 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிமாச்சல பிரதேச முதலமைச்சராக இருந்துள்ளார். வீரபத்ர சிங்கைப் போலவே, யஷ்வந்த் சிங்கும் ஐந்து முறை மாநில முதல்வராக இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் தவிர, தாக்கூர் ராம் லால் மூன்று முறையும், சாந்த குமார் மற்றும் பிரேம் குமார் துமல் ஆகியோர் தலா இரண்டு முறையும் மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர்.
பாஜகவின் ஆட்சி:
1977ல் ஜனதா தளத்தின் சாந்த குமார் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மீண்டும் 1998ல் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. இந்த இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளின் உதவியுடனேயே ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
மீண்ட காங்கிரஸ்:
ஹிமாசலப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 2ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது.
தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி வாக்குஎண்ணும் பணி தொடங்கிய நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து இமாச்சலப்பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்துள்ளது.
கோட்டையைக் கைப்பற்றியது:
ஹிமாச்சல பிரதேசத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸின் ஆட்சியே நடைபெற்று வந்தது. பாஜகவின் ஆட்சி சில ஆண்டுகளே நடைபெற்றுள்ளது. அதுவும் கூட்டணி கட்சிகளின் உதவியுடனே ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றாலும் இப்போது பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்கான சிறு துளி நம்பிக்கையை அளிப்பதாகவே இது அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பயன்படாத வெற்றி...இரு அணிகளாக பிளவு...புதிய முதலமைச்சர் யார்?!!!