கவர் ஸ்டோரி

வள்ளன்மையில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டின் வள்ளல் சிவநாடார்!!! அவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவ நாடார் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

யார் இந்த சிவநாடார்? விவரிக்கிறது இந்தச் செய்திக் குறிப்பு....

ஈதல் இசைபட வாழ்தல் என்றும்:

ஈதலையே இசைபட வாழ்தல் என்று புகழ்ந்துரைப்பார் வள்ளுவர். அற வழியில் ஈட்டும் பொருளை பகிர்ந்து அளித்தலே சிறந்த வழி என்று தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வழி காட்டியது.

அத்தகைய மரபில் வந்தவர், தற்போது இந்தியாவிலேயே நன்கொடை வழங்குபவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.  தூத்துக்குடியைச் சேர்ந்த மூலைப்பொழி கிராமத்தில் பிறந்த சிவநாடார் தாம் பிறந்த ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல் மூலத்தை எல்லாம் நன்கொடையாக பொழியும் வள்ளல் மனத்தினை பெற்றே வளர்ந்தார். 

சிறு நிறுவனம் முதல் உலக நிறுவனம் வரை:

பொறியியல் பட்டதாரியான இவர், நண்பருடன் சேர்ந்து தமிழ்நாட்டில் சின்ன கணினி நிறுவனமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கி, இன்று உலக அளவில் டி.சி.எஸ், இன்போசிஸ் அளவுக்கு மூன்றாம் இடத்தில் ஹெச்.சி.எல் நிலைபெறும் வகையில் உழைத்தார்.

அயராத உழைப்பால் பெரும் பணக்காரர் பட்டியலில் இணைந்த சிவநாடார், உலகம் முழுவதும் சுமார் ஐம்பது நாடுகளில் ஹெச்.சி.எல் நிறுவனம் இயங்கி வரும் நிலைக்கு அதை உயர்த்தினார்.

நன்கொடையாளர்கள் பட்டியல்:

இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நன்கொடையாளர்கள் பட்டியலில் சிவநாடார் பெயர் நிச்சயம் இருக்கும். அந்தளவு கொடை அளிப்பதிலும் தம் அசுர வளர்ச்சியை அவர் நிலைநாட்டிக் கொண்டே இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ‘ஹுருன் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘எடெல்கிவ் ஹுருன் என்று  இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரும் நன்கொடையாளராக சிவநாடார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவநாடார் இந்த ஆண்டு மட்டும் ஆயிரத்து 161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார் என்கிறது அந்தப் பட்டியல். இந்தக் கணக்குப்படி பார்த்தால், நாளொன்றுக்கு சிவநாடார் 3 கோடி ரூபாய்க்கு நன்கொடை கொடுத்திருக்க வேண்டும்.

கடலளவு உதவிகள்:

அதுவும் தாம் பிறந்த மாவட்டமான தூத்துக்குடியில் கோயில் கொண்ட திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலுக்கு சிவநாடார் அளித்துள்ள நன்கொடைகள் கடலளவு என்பதை மறுக்க முடியாது.. கோயிலின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் அளவுக்கு அலைஅலையாய் அந்த செந்தூர் முருகனுக்கு தம் நன்கொடையால் சேவை செய்துள்ளார்.

குறிப்பாக கோயில் கிரி பிராகாரத்தில் 17 கோடி ரூபாயில் கல் மண்டபம் அமைப்பது, முடி காணிக்கைக்கு தனி மண்டபம் எழுப்புவது, உடை மாற்றுவதற்கு புது மண்டபம் புதுக்குவது, நவீனமயமாக்கும் கணினிகள் என இவர் அளித்துள்ளவை கடலே பிரம்மிக்கும் அளவு என்றாலும் தகும். 

உலகிற்கு நாகரிகம் சொல்லித் தந்த தமிழினத்தின் நீள் பாரம்பரியம், தொண்டு மூலம் இந்தியாவுக்கு பாடம் சொல்லும் விதமாக சிவநாடார் திகழ்வது, தமிழ் நிலத்தின் பெருமிதம்.... தமிழ்க் குலத்தின் கொடைநலம்...