பஞ்சாபில் ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி அரசு சுங்க சாவடிகளை மூடுவது போல தமிழ்நாட்டில் திமுக அரசு சுங்க சாவடிகளை மூடுமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேற்று தமிழ்நாட்டில் உள்ள 58 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகள் தங்களது சுங்க கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இதற்கு வாகன ஓட்டிகளும், லாரி உரிமையாளர்கள் சங்கமும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூட சுங்க கட்டண உயர்வுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று பஞ்சாப் மாநில அரசு அங்கு உள்ள ஒரு சுங்க சாவடியை மூட உத்தரவிட்டுள்ளது. பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம் புதியதாக பொறுப்பேற்ற ஓராண்டில் மூடும் 8வது சுங்க சாவடி இது. "சாலைகளை வாடகைக்கு விடும் சகாப்தம் முடிந்துவிட்டது" என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசை பின்பற்றி தமிழ்நாடு அரசும் சுங்க சாவடிகளை மூடுமா என தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று சட்டப்பேரவையில் கட்டணம் வசூலிப்பு காலம் முடிவடைந்துள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் "மாநில அரசு போடும் சாலையில் சற்று விரிவாக்கம் செய்து மத்திய அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. இது போல தமிழ்நாட்டில் 14 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை மூடக்கோரினால், அவை சட்டப்படி போடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் தருகிறது. எங்களை பொறுத்தவரை சுங்க கட்டணம் இருக்க கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு" என தெரிவித்துள்ளார்.
சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கபப்படுவதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து அவை மொத்த கொள்முதல் விலைகள் கூடுவதற்கு அடித்தளம் அமைக்கிறது. இது சில்லறை விற்பனைக்கான விலையை அதிகப்படுத்தி அதனை பொதுமக்கள் மீது சுமத்துகிறது. எனவே வாகனங்கள் வைத்திருப்போர், லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி அனைத்து பொது மக்களும் கூட சுங்க சாவடிகள் மூடப்படுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.