கவர் ஸ்டோரி

"லிஸ்ட் ரெடி அறிவிப்பு எப்போது?? - தொண்டர்கள் வெயிட்டிங்...”

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றமா???? - விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு....!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வரும் கே.எஸ்.அழகிரி, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆக இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் மாற்றப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது...

அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக மீண்டும் கே.எஸ் அழகிரி தேர்வு செய்யப்படலாம் என்றும், இல்லையென்றால் ஸ்ரீ பெரும்பத்தூர் தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ஆக உள்ள செல்வப் பெருந்தகை, கரூர் எம்.பி.ஜோதிமணி, விருதுநகர் எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடாவுமான மாணிக்கம் தாக்கூர், சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம், கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், முன்னாள் ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவான ஈ.வி.கே எஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அண்மைகாலமாக பல சறுக்கல்களையும், சவால்களையும் தமிழக காங்கிரஸ் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஒரு வேளை  முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் செயல்பட்டு வந்த ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டால், தற்போதைய சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வ பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவரை தலைவராக நியமிக்க கூடாது என்றும், செல்வ பெருந்தகை அதற்கு தகுதியானவர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி  காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அல்லது ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி வெளியீடும் என்றும் சொல்லப்படுகிறது....