கவர் ஸ்டோரி

பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சு...கைது செய்யப்பட்ட செய்தி தொடர்பாளர்...நடந்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

திரிணாமுல் காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளரும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவருமான சாகேத் கோகலே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோர்பி பால விபத்து:

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்ததில் 55 குழந்தைகள் உட்பட மொத்தம் 135 பேர் இறந்தனர்.

மோடி குறித்து அவதூறு:

டிசம்பர் 1, 2022 அன்று, திரிணாமுல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, பாலம் இடிந்த பிறகு குஜராத்தில் உள்ள மோர்பிக்கு ஒரு சில மனிநேரங்களுக்காக வருகை புரிந்த பிரதமர் மோடியின் பயண செலவு 30 கோடி எனக் கூறியிருந்தார்.  ஆனால், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 135 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மட்டுமே கருணைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் பதிவிட்டிருந்தார்.  இந்த தகவல்கள் ஆர்டிஐ மூலம் பெறப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார் கோகலே.

மறுப்பு தெரிவித்த பாஜக:

இருப்பினும், கோகலேவின் ட்வீட்டில் கொடுக்கப்பட்ட தகவல்கள் பொய்யான செய்தி என்று குஜராத் மாநில பாஜக அப்போது கூறியது.  இதுகுறித்து எந்த ஆர்டிஐ மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் எந்த ஆர்டிஐக்கும் பதில் அளிக்கப்படவில்லை எனவும் குஜராத் பாஜக தெரிவித்திருந்தது. 

திடீர் கைது:

திரிணாமுல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவருமான சாகேத் கோகாய், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து குஜராத் காவல்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.  மோர்பி சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து தவறான செய்தி பரப்பியதாக கோகலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  கோகலே கைது செய்யப்பட்டதை அவரது கட்சி உறுப்பினரும் மாநிலங்களவை எம்பியுமான டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். 

கைது குறித்த தகவல்:

திரிணாமுல் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக பிரையன் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நேற்றிரவு, சாகேத் இரவு 9 மணிக்கு புது டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானத்தில் சென்றதாகவும் அவர் இறங்கியதும், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த குஜராத் காவல்துறை அவரைக் கைது செய்தது எனவும் பிரையன் தெரிவித்துள்ளார்.

சிறிது கால அவகாசம்:

டெரிக் ஓ பிரையனின் கூற்றுப்படி, அவர் கைது செய்யப்பட்ட பிறகு, இன்று அதிகாலை 2 மணியளவில் கோகலே அவரது தாயாருக்கு போன் செய்து, குஜராத் காவல்துறை தன்னை அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், இன்று மதியம் அகமதாபாத்தை அடைவதாகவும் கூறினார் என தெரிவித்துள்ளார்.  இரண்டு நிமிடம் மட்டுமே தொலைபேசியில் பேச அனுமதித்த போலீசார், அவரது கைபேசி மற்றும் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்