கவர் ஸ்டோரி

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பு...எதிர்க்கட்சிகளின் கூடாரமான பெங்களூரு...!

Tamil Selvi Selvakumar

கர்நாடக மாநில முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா 2ம் முறையாக பதவியேற்றார். 


கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. தொடர்ந்து 5 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையா முதலமைச்சராகவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்பார்கள் என காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் பெங்களூருவின் கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், மாநில ஆளுநர் தாசர்வந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, 2ம் முறையாக சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார். 

தொடர்ந்து டி.கே.சிவகுமாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவர்களுடன் ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, ராமலிங்க ரெட்டி, பி.இசட்.ஜமீர் அகமதுகான் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் ஆளும் இமாசலப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான பெரும்பாலான எதிர்கட்சிகள் இன்று பெங்களூருவில் கூடியது குறிப்பிடத்தக்கது.