கவர் ஸ்டோரி

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!

Tamil Selvi Selvakumar

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது.  

கா்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து ஆலோசித்து வந்தது. 

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தெளிவான ஆணை இருந்தும், முதலமைச்சர் பதவிக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் போட்டியிடுவதால், யார் அடுத்த முதலமைச்சர் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சரை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்வார் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

தொடர்ந்து டெல்லி சென்ற சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் தனித்தனியாக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து டெல்லி ஜன்பத்தில் உள்ள ராகுல்காந்தியை, இருவரும் நேற்று தனித்தனியாக சந்தித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கா்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவை தோ்ந்தெடுத்து கட்சி தலைமை இன்று அதிகாலை அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. மேலும் டிகே சிவக்குமாருக்கு துணை முதலமைச்சா் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மாலை பெங்களூருவில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் 20-ம் தேதி முதலமைச்சா் மற்றும் அமைச்சா்கள் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், கா்நாடாக மாநில ஆளுநா் தவார் சந்த் கெலாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இதனிடையே சித்தராமையாவுக்கு முதலமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளா்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.