கோவை கார் வெடித்து சிதறிய விபத்து தொடர்பாக இதுவரை முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
கோவை கார் விபத்து:
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காருக்குள் சிலிண்டர் வெடித்து சிதறியதில், அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்தியதில், விபத்து என கருதப்பட்ட இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கார் வெடித்து உயிரிழந்த நபரின் வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியுள்ளதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கு உதவும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
5 பேர் கைது:
தொடர்ந்து, உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சனிக்கிழமை நள்ளிரவு 11.25 மணிக்கு ஜமேசா முபீனுடன் 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து மர்ம பொருள் ஒன்றை அவர்கள் ஐந்து பேரும் தூக்கிச் சென்றதும் பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்து வெறும் விபத்து தானா? அல்லது தற்கொலைப்படை தாக்குதலா? என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க: கோவை கார் விபத்து: திமுகவை குற்றம் சாட்டிய அண்ணாமலை...கடிதம் எழுதிய தமிழக பாஜக!யாருக்கு தெரியுமா?
ஹெச்.ராஜா பரபரப்பு ட்வீட்:
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோவை சம்பவம் தொடர்பாக ஒரு பரபரப்பு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ”கோவையில் 23 ம் தேதி நிகழ்ந்தது கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து அல்ல திட்டமிட்ட பயங்கர வாத சதிச் செயல் என்று கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை கமிஷ்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு, காவல்துறை ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. Shame” என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு, கோவையில் ”கோட்டை மேடில் 23 ம் தேதி நடந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இது intelligence failure என்பதிலும் சந்தேகமில்லை” என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.உதயகுமார் கேள்வி:
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், கோவை கார் விபத்து தொடர்பாக முதலமைச்சர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும், எப்போது முதலமைச்சர் மெளனம் கலைப்பார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி முதலமைச்சர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறந்து மெளனம் கலைப்பாரா? என்ற கேள்விகள் அரசியல் பார்வையாளர்களிடம் வட்டமடித்து வருகின்றது.