அண்ணாமலை குறித்து விமர்சித்த அமைச்சர் கீதாஜீவனை, வீட்டை விட்டு வெளியேறினால் கால் இருக்காது என பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக - அண்ணாமலை மோதல்:
தமிழக அரசியலை பொறுத்தவரையில் எதிர்க்கட்சி போல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டுகொண்டிருப்பதாக கூறுகின்றனர். ஏனென்றால், ஆளும் திமுக அரசுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தான் மோதல் போக்கானது எரிமலை போல் வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையில் இருக்கும் மோதலானது அரசியல் களத்தில் மட்டுமல்லாது சமூக வலைதளத்திலும் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிகொள்ளுவது வழக்கம்.
ரஃபேல் வாட்ச் சர்ச்சை:
சமீபத்தில் கூட அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் வாட்ச் குறித்த சர்ச்சையில் கூட செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்படி செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் கீதா ஜீவன் அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்.
அண்ணாமலையை ஒருமையில் பேசிய அமைச்சர்:
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியுள்ளார். அதாவது, அண்ணாமலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்தவர் என்றும், போலியான புகைப்படங்களை கொண்டு அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால், நீங்கள் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும் என ஒருமையில் கடுமையாக விமர்சித்து பேசினார்.
பதிலடி கொடுத்த பாஜக துணை தலைவர்:
இந்நிலையில், நேற்று தூத்துக்குடியில் பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய கிறிஸ்துவ, இந்து, முஸ்லீம் பெண்களுக்கு தையல் மிஷின் மற்றும் சேலைகளை வழங்கினர்.
சர்ச்சையை கிளப்பிய சசிகலா புஷ்பாவின் பேச்சு:
இதன்பின்னர், நிகழ்ச்சியில் பேசிய சசிகலா புஷ்பா, 24 மணி நேரமும் மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அண்ணாமலைக்கே, மக்கள் ஆதரவு உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம் என பொதுக்கூட்டத்தில் பேசிய கீதா ஜீவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அவர், ”நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என்று சசிகலா புஷ்பா ஆவேசமாக பேசியுள்ளார். அமைச்சர் கீதா ஜீவனுக்கு எதிராக தமிழக பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பாவின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.