கவர் ஸ்டோரி

KALS குழும தலைவர் ஜி.என்.எஸ். வாசுதேவன் கேரள அரசுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி..

மாலை முரசு செய்தி குழு

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்தனர்.

இரவில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் விடியலைக் காணாமலேயே உயிரை விட்டனர். கேரளாவில் ஏற்பட்ட இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

வயநாட்டில் ஏற்பட்டதைப் போல மேற்குவங்கம், ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. நாளுக்கு நாள் மண்ணில் இருந்து மனித உடல்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.

KALS குழும தலைவர் ஜி.என்.எஸ். வாசுதேவன் நிதியுதவி

இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் பலரும் தங்களால் ஆன நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலரும் நிதியுதவியை வாரி வழங்குகின்றனர். அந்த வகையில் சினிமா நட்சத்திரங்களின் பட்டியலில் மோகன்லால் 3 கோடி, பிரபாஸ் 2 கோடி, சிரஞ்சீவி, ராம்சரண் சேர்ந்து ஒரு கோடி, விக்ரம், நயன்தாரா, ஆகியோர் தலா 20 லட்சம், கமல்ஹாசன், அல்லு அர்ஜூன் தலா 25 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மூவரும் இணைந்து 50 லட்சம் என நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கால்ஸ் குழுமத் தலைவர் ஜி.என்.எஸ். வாசுதேவன், கேரள மாநிலத்துக்கே சென்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். மேலும் கேரளாவில் நடந்த துயர சம்பவத்துக்கு தன் ஆறுதலையும் தெரிவித்தார்.