கவர் ஸ்டோரி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: மகனை மீட்டுத்தர கோரி மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கும் சாந்தனின் தாயார்...!

Malaimurasu Seithigal TV

இந்திய நாட்டின் பிரதமர் தனக்கும் பிள்ளை தான்; தன்னை  தாயாக அவர் எண்ணி தனது  மகன் சாந்தனை நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை உடன் எடுக்க வேண்டும் என சாந்தன் அவர்களது தாயார் நரேந்திர மோதிக்கு கண்ணீர் மல்க ஊடகங்கள் வாயிலாக உருக்கமாக  வேண்டுகோள் விடுத்தார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  22-ம் தேதி  அன்று விடுதலை அறிவித்தது இந்திய நீதிமன்றம்.

ஆனாலும் அவர் இன்று வரை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுப்புக் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் சாந்தன், தன்னை தனது சொந்த நாடான  இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது  இறுதிக் காலத்தை தன்  அம்மாவுடன் கழிக்க விரும்புவதாகவும்  கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையிலே,  சாந்தன் அவர்களது தாயார் தனது மகனை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று விடுத்துள்ளார். அப்போது,  தனது மகன் மோடிக்கு கடிதம் அனுப்பியதை அறிந்ததை அடுத்து தனது மகனை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு உருக்கத்துடன்  வேண்டுகோள் விடுத்திருந்தார். 

தனக்கு ஏற்கனவே உடலில் நிலை மோசமாக இருப்பதாகவும், த னது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போகுமுன் தன்  மகனை  பார்க்க வேண்டும் எனவும், தன்னால் முழுமையாக இயலாமல் போகும் முன்னர்  தனது  பிள்ளைக்கு  சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை காண வேண்டும் என்றும்  ஏக்கத்துடன் பேசினார்.

தனது மகன் விடுதலை ஆகி வீட்டுக்கு வருவார் என ஆர்வத்துடன் அவருக்கு சமைத்து கொடுக்க வேண்டி தேவையான  சமையல் பொருட்களை  எல்லாம் ஆசை  ஆசையாக  வைத்ததாகவும்,  அவை எல்லாமே அப்படியே இருப்பதாகவும், தனது  வீட்டில் மாமரத்தில் காய் காய்த்தால் கூட தன்மை அகன் வந்து சாப்பிட   வேண்டுமே என எண்ணி காத்துகொண்டிருப்பதாகவும் உருக்கத்துடன் கூறினார்.  

 எல்லா சாதாரண அம்மாக்களைப் போல தன்னால் தன பிள்ளையை 32 வருடங்களாக பார்க்க கூட முடியாமல் பாவம் செய்தவளாக ஆகிவிட்டதாக  வேதனையுடன் தெரிவித்தார். 32 ஆண்டுகளாக தனது மகனுக்கு தன கையால்  தண்ணீர் கூட கொடுக்க முடியவில்லை என்றும், இனி  தன் மகன் வந்தால் ஒரு மாத காலமாவது தன்னால் சமைத்து சோறூட்ட முடியாமல் போய்விடுமோ என கவலையுருவதாக தெரிவித்தார். 

மேலும், இந்திய  பிரதமர் மோடியும் தனக்கு ஒரு மகன் தான் என்றும், அவர் இந்த வயதிலும் அவரது தாயார் இயலாமல் இருந்த நிலையிலும் அவரிடம் ஆசி பெற்றுதான் எந்த ஒரு செயலும் செய்தார் என்றும், அது போல தனது பிள்ளையும் தன்னிடம்  வந்து  சேர வழிவகை செய்து தருமாறு வேண்டிக்கொண்டார். 

ஏற்கனவே 32 ஆண்டுகள் சிறையில் இருந்த தனது மகன், தற்போது, விடுதலைக்கு பின்னும் தன்னை வந்தடையாமல் தன மகனை ஆரத்தழுவி அன்பை பொழிய முடியாமல் தவிக்கும் இந்த தாயாரின் தழுதழுத்த குரலும், தளராத அன்பும் மகனை மீட்டெடுக்குமா...?