கடந்த தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கூட்டணியில் 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது பாஜக. நோட்டோவுடன் போட்டி போட முடியாத நிலையிலிருந்து அத்துடன் ஓரளவு வாக்கு வங்கியும் பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி கூட்டணி கட்சிகளை அமைச்சரவையில் சேர்க்க விரும்புவதால் அதிமுகவிற்கு இடம் தர தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. அதிமுக செய்த உதவிகளுக்கு பிரதிபலனாக அந்த கட்சியை அமைச்சரவையில் சேர்க்க மோடி தயாராக இருக்கிறாராம்.
அதிமுக சார்பில் கடந்த 2009 தேர்தலில் ஜெயித்த ஒரே ஒரு எம்பி ஓபி ரவீந்திரநாத் மட்டும் தான், பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், சிபிஆர் ஜெயிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவினர். நிலைமை இப்படி இருக்க மத்திய அமைச்சரவையில் ரவீந்திராத்க்கு இடம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்த நிலையில் ஒரு சில கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் இடம் அளித்தார் மோடி. ஆனால், அதிமுகவிற்கு இடம் தரவில்லை.
கடந்த 2 வருடத்தில் இரண்டு முறை அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து மோடி பரிசீலித்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மீண்டும் அதிமுகவை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்து மோடி பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட டெல்டா மாவட்டங்களில் படு தோல்வி, எதிர்க்கட்சி தலைவர் ஆக முடியாத நிலை, கட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் என மனவுளைச்சலில் இருக்கும் ஓ.பி.எஸ்ஸை சமாதானம் செய்யும் முயற்சியாக ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வாங்கித்தர எடப்பாடியும் டெல்லி மேலிடத்தில் பேசி வருகிறாராம். ஏனென்றால் சசிகலா அதிமுகவை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் பேசி ஆடியோ வெளியிட்டு வருவதால், ஓபிஎஸ்ஸை சசிகலா பக்கம் போகவிடாமல் கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதனால் தான் அண்மையில் சென்று ஒ.பன்னீர்செல்வத்தை அவர் பார்த்ததாக கூறப்படுகிறது.
அதேபோல, ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கிவிட வேண்டும் என்று அவரது தந்தை ஓ.பி.எஸ் அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் போயுள்ளதாம். தேனி மாவட்ட, அதிமுகவினர் ரவீந்திரநாத்க்கு அமைச்சர் பதவி இந்த முறை கிடைத்துவிடுமா என்று ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.