கவர் ஸ்டோரி

சிவில் கோர்ட் உத்தரவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கில்...நீதிபதியின் உத்தரவு என்ன?

Tamil Selvi Selvakumar

சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம்:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017 செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் இருவரையும் பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வழக்கு தொடர்ந்த சசிகலா:

இதனை எதிர்த்து சசிகலா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்த கூட்டத்தில் தங்களை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். 

வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்: 

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்றும், இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு செய்த சசிகலா:

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், தங்கள் தரப்பில் இருந்து தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் முழுமையாக விசாரணை நடத்தாமலும், தனது தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் வழக்கை நிராகரித்தது தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை ஒத்திவைத்த நீதிபதி:

இந்நிலையில் சசிகலாவின் மேல்முறையீடு வழக்கு நேற்று நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் ஜி.ராஜகோபால், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில், சிவில் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை நிராகரித்தது தவறு என்றும், தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பதாகவும் வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சசிகலா தொடர்ந்த வழக்கில் நவம்பர் 8 ஆம் தேதி நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.