கவர் ஸ்டோரி

இந்திய அரசியலமைப்பின் உச்ச வரம்புபை...நம்பர் 35 வது இடத்தில் உதயநிதி...இவர் தான் கடைசி!

Tamil Selvi Selvakumar

நாளை அமைச்சராக பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுடன் தமிழ்நாடு அமைச்சரவையின் எண்ணிக்கையானது முடிவுக்கு வருகிறது.

பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர் பதவி:

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த விஷயம் என்னவென்றால், அது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பாரா? என்பது தான். உதயநிதி அமைச்சர் ஆக வேண்டும் என்று திமுகவின் அமைச்சர்களே முதலமைச்சர் முகஸ்டாலினுடம் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து உதயநிதியிடம் கேட்டபோது, நான் அமைச்சராவதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறினார். இதனால் தமிழ்நாடு அமைச்சரவை பட்டியலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் தமிழ்நாடு அரசியலில் உலாவி வந்தது. 

முற்றுப்புள்ளி வைத்த முகஸ்டாலின்:

இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் முகஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்து, அவருடைய சார்பில் ஆளுநர் மாளிகையின் முதன்மை செயலாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் உதயநிதிக்கு வழங்கவுள்ள துறை குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. 

உதயநிதிக்கு எந்த துறை:

இதனால் உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்பட உள்ளது என்பதே பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதனிடையே எந்த துறை வழங்கப்படவுள்ளது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அமைச்சர் மெய்யநாதனுக்கு கூடுதலாக உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், முதலமைச்சர் ஸ்டாலினிடம் வசமுள்ள சிறப்பு திட்ட அமலாக்கத்துறையும் தான் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இளைஞர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கக்கூடிய நபராக மாறி, கட்சியிலும், ஆட்சியிலும் அடுத்தகட்டத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் உச்சவரம்பு:

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் முக ஸ்டாலின் அமைச்சரவையில் எண்ணிக்கையானது 35ஆக மாறவுள்ளது. பொதுவாக இந்திய அரசியலமைப்பின் 91வது சட்டத்திருத்தம் 2003ன் படி மத்திய, மாநில அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையானது, மொத்தமுள்ள மக்களவை அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவையின் இறுதி எண்ணிக்கை:

அந்த வகையில் தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அதில் 15 சதவீதம் என்பது 35 அமைச்சர்கள் இருக்கலாம். அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையில் ஏற்கனவே, 34 அமைச்சர்கள் இருக்கும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினை சேர்த்து அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மேல் அமைச்சர்வையை விரிவாக்கம் செய்ய முடியாது..வேண்டுமென்றால் அமைச்சரவையில் மாற்றம் மட்டும் செய்யலாம்...எனவே, உதயநிதியுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையானது முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.