கவர் ஸ்டோரி

யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை - ஆதித்யா தாக்கரே ஆவேசம்!

Malaimurasu Seithigal TV

நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்காத அனைத்து சிவசேனா எம்எல்ஏக்களுக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை அனுப்பினார் ஷிண்டே அணியின் கொறடா பாரத் கோகவாலே.


இருப்பினும் பால் தாக்கரே மீதுள்ள மதிப்பினால் வொர்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரேவிற்கு தகுதி நீக்க அறிக்கை அனுப்பப்படவில்லை எனக் கூறினார்.
கொறடாவின் அறிவுரைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கூறப்பட்டது.


சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தான் எனவும் கட்சியின் கொறடா பாரத் கோகவாலே தான் எனவும், கொறடாவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியிருந்தார் ஷிண்டே.
கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சிவசேனா கட்சி சார்பாக சுனில் பிரபு கொறடாவாகவும் மற்றும் ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு பாரத் கோகலே என தனித்தனி கொறடா நியமிக்கப்பட்டு அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்பட சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தப்பட்டனர். 
ஏக்நாத் ஷிண்டே அணியினர் சிவசேனா கொறடாவை மீறி செயல்பட்டாலும் இரண்டு முக்கிய வாக்கெடுப்புகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
அடுத்த கட்ட  நடவடிக்கைகள் ஜூலை 11 ஆம் நாள் உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு வெளிவரும்.

இடைத்தேர்தலில் தர்மம் வெல்லும்:


பால் தாக்கரே மீதான மரியாதையால் ஆதித்யா தாக்கரேவிற்கு நோட்டீஸ் அளிக்கவில்லை என ஷிண்டே ஆதரவாளர்கள் கூறியது குறித்து ஆதித்யா தாக்கரே கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதாவது, சிவசேனா – காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியானது சட்டரீதியான வெற்றி எனவும், அது நீதிமன்ற சட்டத்தின் முன் நிற்கும் எனவும் கூறினார். அதே சமயம், யாரிடமும் அனுதாபத்தை சிவசேனாவோ, நானோ எதிர்பார்க்கவில்லை என ஆவேசமாக பதிலளித்தார். இதனிடையே, இடைத்தேர்தல் வரும் போது நம்பிக்கையுடன் அதனை உறுதியாக எதிர்கொள்ள சிவசேனா தயாராக இருப்பதாகவும், ஷிண்டே ஆதரவாளர்களுக்கும் பாஜகவிற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.  இடைத்தேர்தலில் ஷிண்டேவின் பாசறையை உத்தவ் தாக்கரேவின் பாசறை இறுதியில் வெற்றிபெற்று தர்மத்தைக் காக்கும் எனவும் ஆதித்யா தாக்கரே கூறினார்.   

என்ன நடந்தது மகாராஷ்ட்ரா அரசியலில்: 


மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிவசேனாவின் முக்கிய பிரமுகரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே அதிருதியை வெளிப்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.