கவர் ஸ்டோரி

நீட் தேர்வுக்கு ஒருபுறம் கடும் எதிர்ப்பு; மறுபுறம் குவியும் விண்ணப்பங்கள்...பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புள்ளி விவரம்!

Malaimurasu Seithigal TV

நீட் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில்  தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.


இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது.  இத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை, தற்போது தேர்வு எழுதிய மாணவர்களின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து நடப்பாண்டு வரை நீட் தேர்வை எழுதிய மாணவர்களில் அதிகம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான். நடப்பாண்டில் மட்டும் 5 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

அதேநேரம், மாநில பாடத்திட்டத்தில் பயின்று நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அம்மாநில பாடத்திட்டத்தில் படித்த  மாணவர்கள் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 1 லட்சத்து 22ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கர்நாடக மாநிலம் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மாநிலம் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  இங்கு 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள்  நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டை பொறுத்த வரையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பல்வேறு கண்டனங்களையும், கடும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட நீட் விவகாரத்தில் ஜெகதீஸ்வரன் எனும் மாணவன் மற்றும் அவரது தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அதோடு, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவில் கையெழுத்தே போடமாட்டேன் என ஆளுநரும் கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நேற்று கூட திமுக சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த மாநில பாடத்திட்ட மாணவர்களில்  தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.