கவர் ஸ்டோரி

மோர்பி தொங்கும் பாலம் விபத்து....வெளியான கடிதம்...உண்மையில் நடந்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

பாலத்தின் பராமரிப்புக்கான நிரந்தர ஒப்பந்தத்தை ஓரேவா குழுமம் விரும்பியது. பாலத்தில் தற்காலிக திருத்தப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும், நிரந்தர ஒப்பந்தம் வழங்கப்படும் வரை பழுதுபார்ப்பதற்கான பொருட்களை ஆர்டர் செய்ய மாட்டோம் என்றும் குழு கூறியுள்ளது. 

மோர்பி பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அவ்வாறு எண்ணினால், அது தவறு.  இந்த வலிமிகுந்த விபத்தின் கதை இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது. 

வெளியான கடிதம்:

உண்மையில், பாலத்தின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் ஓரேவா நிறுவனத்தினால் ஜனவரி, 2020ல் எழுதப்பட்ட கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.  இந்த கடிதம் மோர்பி மாவட்ட கலெக்டருக்கு எழுதப்பட்டதாகும்.  தற்காலிக சீரமைப்பு செய்து பாலத்தை திறப்போம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தக் கடிதத்துக்குப் பிறகும் அதிகாரிகள் மவுனம் காத்ததால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது.
 

ஒரேவா குழுமம்- மோர்பி நகராட்சி:

ஜனவரி 2020 தேதியிட்ட இந்த கடிதத்தில், பாலத்திற்கான ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே நடந்த விவாதங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாலத்தின் பராமரிப்புக்கான நிரந்தர ஒப்பந்தத்தை ஓரேவா குழுமம் விரும்புவதாக கடிதம் வெளிப்படுத்துகிறது.

நிரந்தர ஒப்பந்தம் கிடைக்கும் வரை பாலத்தில் தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடரும் என குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாலத்தை சீரமைப்பதற்கான பொருட்களை ஓரேவா நிறுவனம் ஆர்டர் செய்யாது என்றும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே பணிகளை முடிப்பதாகவும் அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அலட்சியத்திற்கிடையே வழங்கப்பட்ட ஒப்பந்தம்:

இத்தனை அலட்சியத்துக்குப் பிறகும் நிரந்தர ஒப்பந்தத்தை ஒரேவா குழுமத்திற்கே மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. ஜனவரி 2020 இல் வெளியிடப்பட்ட இந்த கடிதத்திற்குப் பிறகும், பாலத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக 15 ஆண்டுகளுக்கு ஒரேவா குழுமத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்ச் 2022 இல் மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் அஜந்தா ஓரேவா நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் 2037 வரையிலானதாகும்.

விபத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை:

பாலம் விபத்துக்குப் பிறகு, மோர்பி நகராட்சி விபத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து வருகின்றனர். ஓரேவா குழுமம் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக நகராட்சி அதிகாரி சந்தீப் சிங் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நகராட்சிக்கு தெரிவிக்காமல், ஒரேவா குழுமத்தினர் ஐந்து மாதங்களில் பாலத்தை திறந்து விட்டனர் எனவும்  பாலம் தொடர்பாக அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு சான்றிதழும் வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார் சந்தீப் சிங். 

-நப்பசலையார்