திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா தன்னோட 69வது வயதில் உடல் நலக்குறைவால் காலாமானார்.
தமிழ் திரைப்படத்துறையில் இயக்கம், நடிப்பு, வசனம், தயாரிப்பு என பன்முகம் கொண்ட கலைஞர் மனோபாலா. மனோபாலா என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது அவரது மெல்லிய தேகம் தான். சினிமாவை ஆட்கொண்டுள்ள உடற்கேலி விமர்சனங்கள் மனோபாலாவையும் விட்டுவைக்கவில்லை. தனது மெல்லிய உடல் தோற்றத்தால் பல உடற்கேலிகளை சந்தித்த மனோபாலா, அதை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமைகளால் பதில் சொல்லி வந்தார்.
இவர் இதுவரை 40 திரைப்படங்களையும்,16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.இயக்குநர் என்ற அந்தஸ்த்தை தாண்டி நடிகராவும் வலம் வந்த மனோபாலா, இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரத்திலும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பகாலத்தில், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா, ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். நடிகர் மோகன் நடித்து இவர் இயக்கத்தில் திகில் படமாக உருவான பிள்ளை நிலா படம் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து கன்னட சூப்பர் ஸ்டாரான விஷ்ணுவர்தனை வைத்து கன்னட திரையுலகில் டிசம்பர் 31 என்ற படத்தை இயக்கிய, மனோபாலா விஜயகாந்த்தை வைத்து சிறைப்பறவை, ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கடைசியாக மலையாள நடிகர் ஜெயராம் நடிப்பில் நைனா திரைப்படத்தை இயக்கிய மனோபாலா இதுவரை நாற்பது திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக இருந்தாலும், அந்த காலம் முதல் இந்த காலம்வரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் மனோபாலா நடித்துள்ளார். இக்கால சினிமா ரசிகர்களுக்கு மனோபாலாவை பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் தெரியத்தான் அதிக வாய்ப்புண்டு.
திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக சிறுசிறு நிமிடங்களிலே தோன்றி மறைந்தாலும், பார்வையாளர்களை கலகலக்கச் செய்யும் திறமை கொண்டவர் மனோபாலா. அருள், சந்திரமுகி, காஞ்சனா, கலகலப்பு, காக்கிசட்டை என இவர் நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகள் பேசுபொருளாக, இவருடைய பங்கும் அதிகமென்றே சொல்லலாம். சந்திரமுகி படத்தில் சாமியார் வேடத்தில் வரும் மனோபாலா, நாசர் மற்றும் வடிவேலு சகிதம் இணைந்து ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்திருப்பார்.
இதேபோல், நடிகர் வடிவேலுவுடன் அவர் இணைந்த தலைநகரம் உள்ளிட்ட படங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய வரிசையில் இடம் பெற்றிருக்கிறது.
இயக்குநராகவும்,நடிகராகவும் வலம் வந்த மனோபாலா, திறமையாளர்களை அடையாளம் காட்டவும் தவறவில்லை. இன்றைக்கு அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தை இயக்குனராக அறிமுகம் செய்ததே மனோபாலா தான். ஆம். எச்.வினோத்தின் முதல் படமான சதுரங்க வேட்டை திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருந்தார் மனோபாலா.
இப்படியாக,தொடர்ந்து திரைத்துறையில் தன்னால் ஆன பங்கை தந்து,மக்களை மகிழ்வித்து வந்த மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
நடிகர் விவேக், மயில்சாமியை தொடர்ந்து இப்பொழுது மனோபாலாவின் இறப்பும் தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.