மனிதம் என்ற வார்த்தையை உருவாக்கியது மனிதன் தான். எந்த நம்பிக்கையில் தெரியுமா? கருணை என்ற உணர்வு மனிதர்களுக்கு மட்டும் தான் என்பதனைக் கூறும் விதத்தில் தான். ஆனால், இந்த பிரபஞ்சத்திலேயே மனிதமற்ற ஜீவன் எது என்றால், அது மனிதர்கள் தான். ஆம்!
அழிக்கும் இனம்:
மனிதநேயம், மனிதம் போன்ற வார்த்தைகளைத் தவிற வேறெங்கும், மனிதர்களுக்கு மத்தியில், மனிதநேயமே இல்லை என்பதை அவ்வப்போது மனிதர்களே நிரூபித்து வருகின்றனர். மிருகங்களை அழித்து, அதன் தோல்களையும், கொம்புகளையும் அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தினர் மனிதர்கள். ஏரிகளையும், குளங்களையும், அழித்து வீடுகள் கட்டினர். குடிக்கும் தண்ணீரை காசுக்கு விற்றனர்.
எல்லை மீறிய அவலம்:
பின், நிழலுக்கு ஒதுங்க இடம் இல்லாத வகையில், பல வருடங்களாக, பல விதமான உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பல மரங்களை மனிதர்கள் பயணம் செய்ய மட்டுமே, சாலைகளை விரிவு படுத்த, வேரோடு அழித்து வருகின்றனர். இது வரை, மரங்களில் இருந்த பறவைகளை விரட்டி விட்டு, பிறகு தான் மரங்களை அகற்றி வந்தனர்.
அறுத்துக்கட்டப்பட்ட மனிதம்:
ஆனால், தற்போது அடிப்படை மனிதநேயத்தை அறுத்துக்கட்டி, ஒரு மாபெரும் பாவச்செயல் செய்துள்ளனர். நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய, மரங்களை நீக்கியுள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்ட பறவை குஞ்சுகள் தஞ்சம் அடைந்திருந்த நிலையில், அவற்றுடனேயே மரம் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில், பர்வீன் கஸ்வான் என்ற IFS அதிகாரியால் பகிரப்பட்டு, படு வைரலாகி, அனைவரது மனதையும் பதை பதைக்க வைத்திருக்கிறது. இதன் தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்ய கேரள வனத்துறை தீர்மானித்துள்ளது.
கடவுளின் சொந்த இடத்தில் நடந்த கொடூரம்:
கேரள மாநிலம் மலப்புரத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சாலை ஓரத்தில் உள்ள ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. நேற்று அங்குள்ள வி.கே. படி என்ற இடத்திலுள்ள மரங்கள் வெட்டப்பட்டன. அந்த பகுதியில் உள்ள ஒரு புளியமரம், ஜேசிபி இந்திரம் மூலம் வேரோடு சாய்க்கப்பட்டது. இந்த மரத்தில் நீர்க் காகம் உள்பட ஏராளமான அரிய வகை பறவைகள் கூடு கட்டியிருந்தன. ஆனால் அதை கவனிக்காமல் மரத்தை வெட்டியதால் 100க்கும் மேற்பட்ட பறவைக் குஞ்சுகள் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மக்கள் கண்டனம்:
பறவைக் குஞ்சுகள் இறந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மரங்களை வெட்டும்போது அதில் உள்ள பறவை கூடுகளில் முட்டைகளோ, குஞ்சுகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் அதை மீறி ஒப்பந்ததாரர் இந்த செயலில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து வனத்துறை ஆலோசித்து வருகிறது எனத் தகவல்கள் கூறுகின்றன.
முதன் முறையல்ல:
இது தொடர்பாக மரம் வெட்டப்பட்ட பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வனத்துறை தீர்மானித்துள்ளது. இதன் பிறகு ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே, சமீபத்தில், இது போலவே ஒரு மரத்தை அதே கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்டு, அந்த வீடியோவும் வைரலானது. மேலும், அதற்கும் பல தரப்பில் எதிர்ப்புகள் வழ்ந்ததை அடுத்து, மீண்டும் தொடர்ந்து இது போன்ர செய்ல்களால் மக்கள் கொந்தளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் மட்டும் வாழ இந்த உலகல்ல. மற்ற உயிரினங்களுடன் வாழ தான் இந்த உலகம். அதனை மறக்கும் ஒவ்வொரு முறையும், இயற்கை சீற்றம் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. சுனாமி, நில நடுக்கம், இடி, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் பல மனிதர்களைக் கொன்று தனது கோபத்தை வெளிப்படுத்திய பின்னும், மனிதமற்ற மனிதர் கூட்டம் செய்த பாவங்கள் குறைந்தபாடில்லை.
--- பூஜா ராமகிருஷ்ணன்