கவர் ஸ்டோரி

பாஜக நிர்வாகிகள் மேலும் 4 பேர் அதிமுகவில் இணைவு...அண்ணாமலை அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு பாஜகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமார் விலகி அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து,  தற்போது மேலும் 4  நிர்வாகிகள் இணைந்திருப்பது பாஜக - அதிமுக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகவே, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பேச்சாள் கூட்டணி கட்சியான பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் விரிசல் ஏற்பட்டு விட்டதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி இருக்காது எனவும் செய்திகள் பரவி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், கட்சிகள் தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. அதன்பிறகு ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக, அதிமுகவுக்கு ஆதரவு அளித்து பிரசாரம் மேற்கொண்டது. இப்படி கூட்டணியாக செயல்பட்டு வரும் கட்சிகளுக்குள், தற்போது நிகழ்ந்து வரும் சில சம்பவம் மீண்டும் இந்த கூட்டணி உடைகிறதா? என்ற பிம்பத்தை எழுப்பியுள்ளது.

தமிழக பா.ஜ.க.வில் முக்கிய அங்கம் வகித்து அதிரடியாக விலகிய நடிகை காயத்ரி ரகுராம், சமீப காலமாக அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைத்த நிலையில், அதே வழிமுறையை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜகவில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று திடீரென்று கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிர்மல் குமார், அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனநலம் குன்றிய மனிதரைப் போல செயல்படுவாக குற்றம் சாட்டியிருந்தார். 

பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார், கூட்டணி கட்சியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சம்பவம் பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அதிமுக கூட்டணி கட்சியாக இருந்துக்கொண்டு  இதை செய்திருக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவின் மாநில செயலாளரான திலீப் கண்ணன், நேற்று பாஜகவில் இருந்து விலகினார். கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள திலீப் கண்ணன், இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்கப் போகிறதோ? என குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொந்தக்கட்சி காரர்களையே வேவு பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கிடையில் நேற்றைய தினம்,  பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் வெளியிட்டிருந்த ட்விட்டர் செய்திக்கு, ”எங்கிருந்தாலும் வாழ்கணா...நாங்கள் என்றும் எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் வழியில்...” என்று பதிலளித்திருந்தார். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் எப்போதும் அண்ணாமலை வழியில் என்று சொன்ன திலீப் கண்ணன், அக்கட்சியிலிருந்து விலகி இருப்பது பாஜக அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பின்னணியில் ஏற்கனவே, பாஜகவில் இருந்து சிடிஆர் நிர்மல் குமார் விலகி அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், திலீப் கண்ணனும் அதிமுகவில் இணைவாரா? என்ற பிம்பம் எழுந்தது. இந்நிலையில் சிடிஆர் நிர்மல் குமார் தலைமையில், தமிழக பாஜக நிர்வாகிகள் திலீப் கண்ணன், அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் தங்களை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.

இப்படி பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது, பாஜக - அதிமுக கூட்டணியை பிளவுக்கு தள்ளுமா?, பாஜக நிர்வாகி சொல்வது போல் அதிமுக கூட்டணியில் இருந்துக்கொண்டு இப்படி செய்வதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வன்மையாக கண்டிப்பாரா? அவரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.