கவர் ஸ்டோரி

காமராஜரின் 122 பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

பெருந்தலைவரின் சிறப்புகளை கூறி, அவரின் பிறந்த நாளுக்கு பெருமை சேர்க்க வருகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு.

மாலை முரசு செய்தி குழு

கெளசிக நதியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள அழகிய மாவட்டம் விருதுநகர். தமிழக அரசின் முத்திரையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அழகிய கோபுரம், நாவில் நனைந்து கரையும் பால்கோவா, ஏற்றுமதியாகும் நல்லெண்ணெய், மிளகாய் வற்றல், கருங்கண்ணிப்பருத்தி என எத்தனையோ சிறப்புகள் விருதுநகருக்கு உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக காமராஜர் என்ற மாபெரும் தலைவரை தந்த பெருமை அந்த ஊருக்குத்தான் உள்ளது. இங்குதான் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் குமாரசாமிக்கும், சிவகாமிக்கும் மகனாகப்பிறந்தார் காமராஜர்.

1919ல் காங்கிரசில் இணைந்த காமராஜர் சுதந்திரப்போராட்டத்தின், உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று 1930 ஆம் ஆண்டு சிறை சென்றார். அதன் பின்னர் அவரது அரசியல் பயணம் ஆரம்பித்தது.

1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். முன்னதாக 1941 ஆம் ஆண்டில் விருதுநகர் நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் முதன் முதலில் பொறுப்பேற்றார். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர் ஓர் கிங் மேக்கர்.

கிராமங்கள் தோறும் பள்ளிகளை உருவாக்கி ஏழை மாணவர்களும் எளிதில் கல்வி கற்க, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். இதனால் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.

தமிழ்நாடு முழுவதும் அணைகளை கட்டி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த அவர், ஆவடி டாங்கி தொழிற்சாலை, திருவெறும்பூர் தப்பாக்கிச் தொழிற்சாலை. பாகூர் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை நிறுவியவர் இவர்தான்.

வாய்மை. நேர்மை, எளிமை, தூய்மை என தான் வாழ்க்கை முழுவதையுமே பாடமாக தந்த தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை காமராஜர்.

தம்முடைய அயராத உழைப்பினால் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராஜர் மறைவிற்கு பின்னர்,1976ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படதுடன் நினைவு அஞ்சல் தலையும் வெளியிட்டு அவருக்கு புகழ் சேர்த்தது அப்போதைய மத்திய அரசு.

சென்னை அண்ணாசாலையில் பல்லவன் இல்லத்திற்கு எதிரில் அமைந்துள்ள காமரஜர் சிலையை 1961ல் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அதற்கும் ஒருபடி மேலே சென்று காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்.

ஆம்... இன்று காமராஜரின் பிறந்தநாளை,கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறது தமிழ்நாடு. காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம் பல மாற்றங்களை பெற்று இன்றும் ஏழை மாணவர்களின் பசியை போக்குகிறது. இதனை பின்பற்றி காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் கிராமப்புற பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் காமராஜர் பிறந்தநாளில் விரிவாக்கம் அடைந்திருக்கிறது.

இனி கிராமப்புற ஏழை மாணர்களின் கல்வி தாகத்திற்கு, தமிழ்நாட்டில் பசி தடையாக இருக்காது.

மெத்தப்படித்து, சட்டென்று வேலைக்கு சென்று, கற்ற கல்வியை கண்டபடி பயன்படுத்தி, சர்ச்சைக்குள் சிக்கி வாழும் மனிதர்களுக்கு மத்தியில், தான் கல்வி கற்கவில்லை என்றாலும், கல்லாதவர்களே இல்லை என்று தமிழ்நாட்டை உருவாக்கி சரித்திர சாதனை படைத்து மாபெரும் தலைவராக மனதில் நிற்கிறார் காமராஜர்.

காமராஜரின் ஆட்சியை தருகிறோம் என்று அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த அனைவரும் கூறினாலும், சட்டங்களாலும் திட்டங்களாலும் அவரது பொற்கால ஆட்சியை இதுவரை யாரும் தரமுடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.