கவர் ஸ்டோரி

மீண்டும் மீண்டும் ரிப்பீட்...ஐகோர்ட் தீர்ப்பால்...பறிபோன ஜெயலலிதாவின் பதவி...!

Tamil Selvi Selvakumar

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பால் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா வகித்த நிரந்தர பொதுச்செயலாளர் பதவி பறிபோயுள்ளது.  

25 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர பொதுச்செயலாளர்:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக கட்சியில் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது இறப்பிற்கு பிறகு சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக பதவியேற்றார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் அவரை நீக்கி நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனவும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதிமுக கட்சியை வழிநடத்தி வந்தனர். 

ஜூலை 11:

இந்நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி எழுந்த ஒற்றைதலைமை கோஷத்தை தொடர்ந்து அதிமுகவில் கட்சி பிளவு ஏற்பட்டது. இந்த ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவில் அணையா தீயாய் வெடித்து கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர், துணை பொதுசெயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த புதிய தீர்மானங்கள் மூலம் ஜெயலலிதா வகித்து வந்த நிரந்தர பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் 17 தீர்ப்பு:

ஜூலை 11 ஆம் தேதி ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ்சின் பதவியும் செல்லாது என்பதால், ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் பதவி தப்பியது.

ஆகஸ்ட் 18:

ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. ஆகஸ்ட் 17ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பு ரத்து செய்வதாகவும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மீண்டும் காலியான ஜெயலலிதாவின் பதவி:

சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் படி, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிகளை இயற்றிய தீர்மானமும், ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்ட தீர்மானமும் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் காரணமாக மீண்டும் “நிரந்தர பொதுச்செயலாளர்” என்ற ஜெயலலிதாவின் அந்தஸ்து மீண்டும் பறிபோய் உள்ளது. 

தப்பிக்குமா? பிழைக்குமா?:

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இப்படி மாறி மாறி நீதிமன்றத்தில் மோதி கொள்வதால், மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவின் நிரந்த பொதுச்செயலாளர் பதவி தப்பிக்குமா? பிழைக்குமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலில் எல்லாம் ஜெயலலிதா தான் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அடிக்கடி பதவியை விட்டு நீக்குவார்...ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அவரது பதவியே நீக்கப்படுவதும், நியமிக்கப்படுவதுமாய் இருப்பதாக அரசியல் பார்வையாளர்களிடம் பேசப்பட்டு வருகிறது...