கவர் ஸ்டோரி

எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையாத ஜெகன்மோகன், நவீன், மாயாவதி!!! காரணம் என்ன??

Malaimurasu Seithigal TV

கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காக பல எதிர்க்கட்சி தலைவர்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்து பேசி வருகிறார். மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இதற்காக செயல்படுவதாக கூறப்படுகிறது. 

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் எதிர்க்கட்சிகள் கூட்டிணைவுக்கான முயற்சிகளில் ஈடுபாடு காட்டியதாக தெரியவில்லை.

இவ்வாறான நிலையில் மாயாவதி, ஒவைசி, ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்ற தலைவர்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருந்து விலகி இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மாயாவதி, ஜெகன் மோகன் ரெட்டி, ஓவைசி :

நிதிஷ்குமார், கே.சி.ஆர், மம்தா பானர்ஜி, சரத் பவார் போன்ற பெரிய தலைவர்கள் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கும் அதே வேளையில், மாயாவதி, ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தூரத்தை காத்து வருகின்றனர். இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் “எதிர்க்கட்சி ஒற்றுமை என்பது ஒரு பெரிய சவால். அது நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது வேறு எந்த தலைவரானாலும் எதிர்க்க்டசிகளை ஒருங்கிணைப்பது முடியாத செயல். மாயாவதி, ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஒவைசி ஆகியோருக்கு இது நன்றாகவே தெரியும்.’ என்று கூறியுள்ளார்.

மாயாவதி:

”பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைமை கடந்த சில ஆண்டுகளில் மோசமடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாயாவதி முதலில் தனது சொந்தக் கட்சியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். புதிதாக அவர் கட்சியை மீட்டுருவாக்கம் மற்றும் விரிவாக்கம் செய்து வருகிறார். தன்னை வலுப்படுத்திக்கொள்ளாமல் எதிர்கட்சியுடன் வந்தால், இனி வரும் காலங்களில் நஷ்டத்தை தான் தாங்க நேரிடும் என்பது மாயாவதிக்கு தெரியும்.” என மூத்தப் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

மேலும்,” பலமான கட்சிகள் தாங்களாகவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும், அதை மாயாவதி ஏற்க வேண்டும். அதனால்தான் மாயாவதி இப்போது எதிர்க்கட்சியில் சேராமல் அவரது கட்சியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டாவது காரணம், மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி கட்சி கூட்டணி வைத்திருந்தது. ஆனால் அவர்களுக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை.” என்றும் தெரிவித்துள்ளார். 
 
அசாதுதீன் ஒவைசி:

”ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளின் எந்தவிதமான கூட்டங்களிலும் கலந்துகொள்ளவில்லை. ஒவைசி எதிர்க்கட்சியில் இருந்து தன்னை ஒதுக்கி வைக்க முயற்சிக்கிறார். தனித்து போராடினால் வாக்குகள் பிரிந்துவிடாது என்பது ஒவைசிக்கு தெரியும். இது தவிர, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர் தனது கட்சியை விரிவுபடுத்தவும் முடியும். எதிர்கட்சியுடன் சென்றால் இதை செய்ய முடியாது.” என்று மூத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் நவீன் பட்நாயக்: 

”ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் ஒன்றிணைக்க முயலும் எதிர்க்கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவே தெரிகிறது. அதேபோல், ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலகியே இருக்கிறார். ரெட்டி மற்றும் பட்நாயக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே ஆதரவளித்தனர். இருவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவைக் கொண்டுள்ளனர்.” எனவும் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர்.

”இரு மாநிலங்களிலும் 2024ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இருவரின் நிலையும் அந்தந்த மாநிலங்களில் மிகவும் வலுவாக உள்ளது. மாநிலங்களவைத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இடங்களைப் பிரிக்க இவர்கள் இருவரும் விரும்பவில்லை. அதனால்தான் இப்போதைக்கு ரெட்டியும் பட்நாயக்கும் தனித்தனியாக இருந்து அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.” எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை இணைக்கும் முயற்சி:

கடந்த வாரத்தில் 3 நாள் சுற்றுப்பயணமாக நிதிஷ் குமார் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, டி ராஜா, எச்டி தேவகவுடா, எச்டி குமாரசாமி, ஓம் பிரகாஷ் சவுதாலா, அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் கட்சியை விரிவுபடுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். பல மாநிலங்களில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களையும் மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்த்துள்ளார்.  அதேபோல், தெலுங்கானா முதலமைச்சர் கேசிஆர், தென்மாநில அரசியல் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் சரத் பவாரும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

                                                                                                                                  -நப்பசலையார்