பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய புதிய நாடாளுமன்றத்தில், மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இங்கேயாவது எதிர்க்கட்சிகளின் ஒலிப்பெருக்கி பேசுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததன் ஒரு பகுதியாக, மத்திய அரசால் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு மாநில அரசுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நிலையில், புதிய கட்டடத்தை சவார்க்கரின் பிறந்த நாளான்று திறப்பதா? என்றும், கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததற்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சியினர் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணித்தனர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே புதிய நாடாளுமன்றத்தில் இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக செங்கோல் வைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சியினரின் அரசியல் வட்டாரங்களிலும் இந்த செங்கோல் நடுநிலை வகிக்குமா? என்ற கேள்வியுடன் பல்வேறு விவாதங்களை நடத்தினர்.
தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட அன்று, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கோலை பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதினங்கள் சேர்ந்து வழங்கினர். பின்பு, பிரதமர் மோடி அந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்தார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நடுநிலையை பின்பற்றுவதில்லை என எதிர்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை வைத்து வந்ததால், இனி நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் சபாநாயகர் நடுநிலைமையை கடைபிடிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இந்த செங்கோலை வைப்பதாக கூறினர்.
இதனிடையே பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் நீதி வேண்டி கட்டிட திறப்பு விழா அன்று, புதிய நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் அணி வகுத்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் போராட்டகாரர்களை தரதரவென்று அடித்தும் இழுத்தும் சென்றனர். இதனையடுத்து, புதிய கட்டிடம் திறக்கப்பட்ட அன்றைக்கே செங்கோல் நடுநிலைமையை இழந்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில், வருகிற ஜூலை மாதத்தின் 3 வது வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மழைக்கால கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வ தேதி, ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சரவைக் குழுவில், இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் ’ராகுல் காந்தி லண்டனில் பேசியதை கண்டித்து’பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வலை நெறிக்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்திலையாவது எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் வரும் ஜூலை மாதம் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு முன்னிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றால், அப்போதாவது எதிர்க்கட்சிகளின் ஒலிப்பெருக்கி பேசுமா? என்பதும், செங்கோல் நாடாளுமன்ற விவாதங்களில் நடுநிலைமை வகிக்குமா? என்பதுமே அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.