அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே திடீரென வார்த்தைப் போரின் மையமாக வங்கதேசம் மாறியுள்ளது. பங்களாதேஷின் உள்நாட்டுப் பிரச்சினையில் டாக்காவில் உள்ள இரு நாட்டு தூதரகங்களும் தலையிடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய இந்த தகராறு இதுவரை நின்றபாடில்லை.
டிசம்பர் 14 அன்று, டாக்காவிற்கான அமெரிக்கத் தூதர், வங்கதேசத்தின் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மறைமுகமாக இருக்கும் தலைவரின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துள்ளார். 2013ல் பிஎன்பி தலைவர் வலுக்கட்டாயமாக காணாமல் போக வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமுதல் வங்கதேசத்தை பிரதமர் ஷேக் ஹசீனா வசேத் தலைமையிலான அவாமி லீக் ஆட்சி செய்து வருகிறது.
வங்கதேசத்தை எச்சரித்த அமெரிக்கா:
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தற்போது கடும் பதிலடி கொடுத்துள்ளது. டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில், வங்கதேச அரசாங்கத்திடம் இந்த பிரச்சினையை மிக உயர்ந்த மட்டத்தில் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளது. மேலும், வாஷிங்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பும் இந்த பிரச்னை எழுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அனைத்து மனித உரிமை மீறல்களையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை எச்சரித்த ரஷ்யா:
தூதரகத்தின் இந்த முயற்சிக்கு ரஷ்யா கடுமையாக பதிலளித்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த நடவடிக்கை, மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது என்ற அமெரிக்காவின் கூற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்று கூறியுள்ளது. ரஷ்ய தூதரகம் ஒரு அறிக்கையில் கூறியது- ”வங்கதேசம் போன்ற நாடுகள் தங்கள் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை வேறு எந்த நாட்டின் அறிவுறுத்தல்களின் படியும் தீர்மானிக்கவில்லை. மாறாக தங்கள் தேசிய நலன்களை நிறைவேற்றுவதற்காக அவர்களே வரையறைக் கொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளது.
பதிலளித்த அமெரிக்கா:
இந்த அறிக்கை வெளியான அடுத்த நாளே அமெரிக்க தூதரகம் பதிலளித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில்- ”ரஷ்யாவின் இந்த பேச்சு உக்ரைனுக்கும் பொருந்துமா? ” என எதிர் கேள்வியெழுப்பியுள்ளது அமெரிக்கா.
எதற்காக இந்த பரிவு?:
வங்கதேச ஆளுங்கட்சிக்கு எதிராக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகி வருவதாக தெரிகிறது. பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக தெரிகிறது. மேலும் ரஷ்யா ஆளுங்கட்சிக்காக பரிந்து பேசுகிறது. இதற்கான காரணங்களை உற்று நோக்கும் போது, அமெரிக்கா ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாக இருப்பது வங்கதேசத்துக்கு மிகவும் முக்கியமானது.
வங்கதேசத்துக்கு இதற்கு முன்னர் ரஷ்யா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. ஆனால் சமீபகாலமாக வங்கதேசம் குறைந்த விலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயைப் பெற முன்முயற்சி எடுத்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை அமெரிக்காவும் ரஷ்யாவும் சாதகமாகப் பயன்படுத்த முயல்வதாகத் தெரிகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-நப்பசலையார்
இதையும் படிக்க: இனி எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம்... தேர்தல் ஆணையம் கண்டறிந்த புதிய தீர்வு...அது என்ன?!!